பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/82

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்

81


செய்திகளில் குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும். துணையாக நின்று இவன் போரிட்டமையால் வெற்றிகள் இவனுக்குரியன என்று வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை. இவன் உன்னமரத்தின் பகைவன் என்று குறிப்பிடப்பட்டுள்ளான்[1]. இந்த உன்னமரம் அகப்பா மன்னனின் காவல் மரமாகவோ வேறொருவனுடையதாகவோ இருக்கலாம். யாருடையதாக இருப்பினும் இவன் அந்த உன்ன மரத்தை வெட்டிச் சாய்த்தான் என்பது மட்டும் தெளிவாகிறது[2]. அகப்பாப் போரில் துணையாய் நின்றதோடு மட்டுமன்றி வேறு சில போர்களிலும் இவன் ஈடுபட்டு வெற்றிகண்டான்.

செருப்பல கடந்தான்;[3] பகைவரை ஓட்டினான்;[4] பகைவர் குழுவை நொறுக்கினான்;[5] ஞாயிற்றின்முன் விண்மீன் மறைவது போல இவன்முன் நிற்கமாட்டாது பகைவர் மறைந்தனர்[6] என்னும் செய்திகள் அவ்வெற்றிகளைத் தெரிவிக்கின்றன.

தோற்ற மன்னர்கள் இவனுக்குத் திறை தந்தனர்[7]. யானைகள் அத்திறைப் பொருள்களில் அடங்கியிருந்தன[8]. தன் பகையைத் தேடிக் கொள்வதால் விளையும் தீங்கை, பகைவர்கள் நாட்டை அழிப்பதன் வாயிலாக வெளிப்படுத்திப் பகைநாட்டுக் குடிமக்களையும் உணரும்படி செய்தான்[9]. இதனால், மன்னன் விரும்பாவிட்டாலும் பகைநாட்டு மக்கள் தாமே முன்வந்து இவனுக்கும் இறை (வரி) செலுத்தியதுண்டு[10].

இவனது வெற்றிகளுக்கு உறுதுணையாய் அமைந்தது இவனுடைய படை. இவனது நாற்படை போரில் தேர்ச்சி பெற்றிருந்தது[11]. இவனது வேல், வாள் வீரர்கள் வெற்றி உறுதி தோன்றத் தம் படைக்கருவிகளில் தம் குடிச் சின்னமாகிய போந்தைக் கண்ணியையும் போர் வெற்றிச் சின்னமாகிய வாகைப் பூவையும் தொடக்கத்திலேயே அணிந்து


  1. பதிற். 61 : 6
  2. உன்னமரம் தன் இலையை உதிர்த்து மன்னனுக்கு நேரவிருக்கும் தீங்கை முன்கூட்டி அறிவிக்கும் மரம் என்றும், அம்மரம் காட்டிய தீக்குறியையும் பகைத்து வெற்றி பெற்றான் - ஊழையும் உப்பக்கம் கண்டான் – என இதற்கு விளக்கம் பெறலாம்.
  3. பதிற். பதி. 7 : 5
  4. ஷை 7 : 4
  5. பதிற். 66 : 4 - 5
  6. ஷை 64 : 12 - 13
  7. புறம். 387 : 12
  8. பதிற். 66 : 7
  9. ஷை 69 : 11 - 14
  10. ஷை 62 : 12
  11. ஷை 69 : 15 - 18