பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்

83


இவ்வாறு இவன் கொடை நல்கிய போதெல்லாம் முன்பு கொடுத்தவற்றை நினைத்துப் பார்த்ததில்லை; இவ்வளவு கொடுக்கிறோமே என்று பெருமித உணர்வு தோன்றி மகிழ்வது மில்லை. கொடுக்கும் போதெல்லாம் பெருவள்ளல்[1].

மற்றும் இவன் வேள்வி செய்து கொடை வழங்கினான்[2]. அவ்வேள்வியில் அந்தணர்களுக்குப் பெறற்கரிய அணிகலன்களைத் தாரை வார்த்துக் கொடுத்தான்;[3] கடவுளர்க்கு உணவூட்டினான்; அதனால் ஐயர்கள் இன்புற்றனர்[4]. வேள்வி செய்த திருமால் வழிநின்ற புரோகிதனுக்கு ஒகந்தூர் என்னும் நெல் மிகுதியாக விளையும் ஊரையே கொடுத்தான்[5].

தன்னைப் பாடிச் சிறப்பித்த புலவர் கபிலர்க்கு நூறாயிரம் காணம் பணமாகக் கொடுத்தான். 'நன்றா' என்னும் குன்றின் மீது ஏறி நின்று தன் கண்ணிற்கண்ட இடமெல்லாம் அவருக்குக் காட்டி அவற்றையெல்லாம் அவருக்குப் பரிசாகக் கொடுத்தான்[6].

பண்பு நலன்

வள்ளன்மைப் பண்புடன் மற்றும் சிலவும் குறிப்பிடத் தக்கனவாய் இவனிடம் அமைந்திருந்தன. இவன் வளமான உள்ளம் படைத்தவன்[7]. பார்ப்பார்க்கல்லது பணியாமை, நட்டோர்க்கல்லது கண் அஞ்சாமை, மகளிர்க்கல்லது மார்பு மலராமை, உலகமே பிறழ்ந்தாலும் சொன்ன சொல் தவறாமை ஆகிய பண்புகள் இவனிடம் குடிகொண்டிருந்தன[8].

சிறப்புச் செயல்கள்

பகைவரை வென்று கிடைத்த கொண்டிப் பொருளை இவன் தமிழ் வளர்க்கும் பணிக்குச் செலவிட்டான்[9].

இவன் பல ஊர்களைத் தோற்றுவித்து, நாடோடிகளாகத் திரிந்து வந்த மக்களை நிலைபெற்று வாழும்படி செய்தான்[10].


  1. பதிற். 61 : 8
  2. பதிற். பதி. 7 : 6 - 7
  3. பதிற். 64 : 4 - 5
  4. ஷை 70 : 18 – 19
  5. பதிற். பதி. 7 : 9
  6. ஷை கொளு
  7. ஷை 7 : 11
  8. பதிற். 63 : 6 - 7
  9. ஷை 63 : 9 'கொண்டி மிகைப்படத் தண்டமிழ் செறித்து'
  10. பதிற். பதி. 7 : 4 'நாடுபதி படுத்து'