பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/85

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-1


தோற்றப் பொலிவு

இவன் சிறந்த அணிகலன்களைத் தன் மார்பில் அணிந்து கொண்டு பொலிவுடன் தோற்றமளித்தான்[1]. கழலும் தொடியும் கூட இவன் அணிந்திருந்தான்[2].

சிறப்புப் பெயர்கள்

செல்வக்கோ,[3] செல்வக்கோமான்,[4] வாழியாதன்,[5] செல்வக் கடுங்கோ வாழியாதன்,[6] சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதன்,[7] கோ ஆதன் செல்லிரும் பொறை[8] முதலான பெயர்களால் இவன் குறிப்பிடப்படுகிறான். ஆதன் என்பது இவன் பெயர். வாழி என்பது இக்காலத்தில் திரு என்று குறிப்பிடுவதுபோன்று சங்ககாலத்தில் மன்னர்களுக்குத் தந்த அடைமொழியாயிருக்கக்கூடும். வெற்றிச் செல்வ மிகுதி, மன்னர்களின் அடைக்கல மிகுதி,[9] தம்மைச் சேர்ந்தோர்க்குச் செல்வம்போல் பயன்பட்ட தன்மை[10] முதலான தன்மைகளின் அடிப்படையில் 'செல்வ' என்னும் அடைமொழி இவனது பெயரில் சேர்ந்திருக்கலாம். மழைமேகங்களைக் காட்டிலும் மிகுதியாகக் கொடை வழங்கிய இவனது தன்மையாலும்[11] 'செல்' என்னும் அடைமொழி [12] தோன்றியிருக்கலாம்.

காலம்

இவனைப் பாடிய கபிலர், பாரி இறந்தபின் இவனிடம் வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே, பாரி காலத்திற்குப் பின் இவன் வாழ்ந்தான் என்பது தெளிவாகிறது. பதிற்றுப்பத்து ஏழாம் பத்தில் இவன் கருவூரை ஆண்ட செய்தி குறிப்பிடப்படவில்லை. ஆனால், பாடலிலேயே அச்செய்திக்கான குறிப்பு உள்ளது. எனவே, ஏழாம் பத்து இவன் பூழிநாட்டில் ஆண்டுக் கொண்டிருந்தபோதே, அதாவது அவனது தந்தை கருவூரில் ஆண்டுகொண்டிருந்தபோதே பாடப் பட்டது என்பது தெளிவாகிறது. பல்யானைக் குட்டுவன் அகப்பாக்


  1. பதிற். 65 : 12
  2. ஷை 64 : 15
  3. ஷை 63 : 16
  4. ஷை 67 : 23
  5. ஷை 63 : 21
  6. ஷை பதி. 7 : 12
  7. புறம். 387 : 30
  8. புகழுர்த் தமிழிக் கல்வெட்டு
  9. பதிற். 63 : 8 - 12
  10. ஷை 65: 5 'சேர்ந்தோர் செல்வ' ஷை 65 : 11 'பரிசிலர் வெறுக்கை'
  11. ஷை 64 : 18
  12. புகழூர்க் கல்வெட்டுப் பெயரில் உள்ளது