பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/88

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்

87


வளர்ந்த இடம்

இவன் 'புகார்ச் செல்வன்' என்று கூறப்படுகிறான்[1]. அவ்வாறு இவன் கூறப்படும்போது புகார் நாட்டு உயர்திணை மகளிரும் (செல்வச் சீமாட்டியர்) வயலில் நாரைகளை ஓட்டும் மகளிரும் (உழைக்கும் பெண்டிர்) இரவும் பகலும் பாசிழை களையாது இணைந்து குரவை ஆடும் இடம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்குறிப்பு இத்தகைய பெண்டிர்க்கிடையே இவன் வளர்ந்தவன் என்பதைத் தெளிவுபடுத்துகின்றது. இதனால், இவன் புகார் நகரத்தில் இளமையில் வளர்ந்து வந்தான் எனலாம்.

நாடு காத்தல்

'பூழியர் மெய்ம்மறை' என்று இவன் கூறப்படுகிறான். பூழி நாட்டு மக்களுக்குக் கவசம்போன்று விளங்கினான் என்பது இதன் பொருள். இவன் தொடக்கக் காலத்தில் ஆண்டுகொண்டிருந்த நாட்டுக்கு அண்மையில் பூழிநாடு இருந்தது. அந்நாட்டைக் காக்கும் பொறுப்பும் இவனிடம் இருந்தது[2].

காமூர்ப் போர்

கழுவுள்[3] என்பவன் காமூரைத் தலைநகராகக்கொண்டு ஆண்டவன். இந்தக் காமூர் தோட்டிமலையில் இருந்தது. ஆழமான அகழி, குறுகிய ஞாயில் உறுப்புகளைக் கொண்ட மதில் ஆகிய அரண்களை உடையது அந்த ஊர். அவ்வூர் மக்கள் பசு வளர்த்த இடையர்கள். அரசனது போர் வீரர்களாக வாழ்ந்த அவ்வூர் இளையர்கள் பிற நாடுகளுக்குச் சென்று வெட்சிப் போர் செய்து ஆநிரைகளைக் கவர்ந்துவந்த ஆற்றல்மிக்க வீரர்கள்.

பெருஞ்சேரல் இரும்பொறை கழுவுள் மன்னனது கோட்டையைத் தாக்கினான். வென்று காமூரைத் தீக்கிரையாக்கினான். அதில் எழுந்த தீப்புகை, திசைகளையும் மதில்களையும் மறைக்கும் அளவுக்கு மிகுந்து உயர்ந்தது. இந்தப் போர் காலையில் தொடங்கி மாலையில் முடிவுற்றது. தன் தோல்வியை எண்ணிய கழுவுள், மறுநாள் விடியுமுன்பே காமூரை விட்டு ஓடிவிட்டான். தலைவனை இழந்த காமூர் மக்கள் கலங்கினர்;


  1. ஷை 73 : 9
  2. பதிற். 73 : 9
  3. அகம். 135 : 12, 135 : 13; பதிற். 71 : 17, 72 : 7