பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-1


மேலும் போர் செய்யாமலிருக்கும்படி பெருஞ்சேரலை வேண்டிக் கொண்டனர்; கைம்மாறாகப் போர் யானைகளையும் அணிகலன்களையும் தந்தனர். அவர்கள் தந்த திறைப்பொருளைப் பெற்றுக் கொண்டு பெருஞ்சேரல் மேலும் அவர்களைப் போரிட்டுக் கொல்லாது விட்டு விட்டு மீண்டான். கையூட்டு வாங்கிக் கொண்டு உயிரைக் கொல்லாது விட்டுவிட்டுச் செல்லும் எமன்போல அவன் மீண்டான் என்று கூறப்படுகிறது.

இந்தப் போரில் பெருஞ்சேரல் இரும்பொறையோடு 14 வேளிர் தலைவர்கள் சேர்ந்திருந்தனர் எனத் தெரிகிறது[1]. இந்த வேளிர் தலைவர்கள் தாய்வழி உறவினரான பழனிமலை வேளிர், மனைவிவழி உறவினரான மையூர் வேளிர், இந்த வேளிர்களுக்கு உறவினரான பிற வேளிர் ஆகியோர் சேர்ந்த குழுவினர்[2].

இந்தப் போரில் கழுவுள் மடமை அதாவது, அறியாமை காரணமாகப் பெருஞ்சேரலை எதிர்த்துள்ளான் என்பதை எடுத்துக் கூறிப்[3] போருக்குப்பின் இருவரையும் ஒன்றுசேர்க்க அரிசில்கிழார் முயன்றுள்ளார் எனத் தெரிகிறது. இவரது முயற்சி கைகூடியிருக்கலாம்.

கொல்லிமலைப் போர்

கொல்லிமலையில் நீர்கூர் என்பது பண்டைக்காலத்தில் இருந்த ஓர் ஊர். கழுவுளை வெற்றிகண்ட பெருஞ்சேரல் இரும்பொறை கொங்கு நாட்டில் ஊடுருவி அதியமானை இந்த ஊரில் தாக்கினான்[4]. பெருஞ்சேரலின் செல்வாக்கைக் குலைக்க விரும்பிய சோழனும் பாண்டியனும் அதியமானுடன் சேர்ந்து கொண்டனர். போர் கடுமையாக நடைபெற்றது பெருஞ்சேரல் வெற்றி பெற்றான்; பகையரசர்களின் முரசு, குடை, அணிகலன்கள் முதலானவற்றைக் கைப்பற்றிக் கொண்டான்.


  1. 14 வேளிர் கழுவுளின் காமூரை அழித்த போரைப் பரணர் பாடியுள்ளார். பெருஞ்சேரல் இரும்பொறை கழுவுள் தலைமறைந்து ஓடும்படி போரிட்டதை அரிசில்கிழார் குறிப்பிடுகிறார். இரண்டு பாடல்களிலும் மன்னர் கலங்கிய நிலை தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. எனவே, இரு போரும் ஒன்றென்றே கொள்ளத் தகும்.
  2. இவ்வாறு 11 வேளிரும், சேர, பாண்டியரும் ஒன்று கூடிக் கரிகால் வளவனோடு வெண்ணியில் போரிட்டுத் தோற்றதை அகநானூறு 246-ல் காணலாம்.
  3. பதிற். 71 : 17, 72 : 7, 73 : 1
  4. ஷை பதி: 8 : 3 - 5