பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/91

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-1


பெற்ற வீரர்களின் காவலையும் அது உடையதாக இருந்தது. பெருஞ்சேரல், தகடூரை அரசன் இல்லாத போது தாக்கியதால் எளிதில் கைப்பற்றிக் கொண்டான்; கோட்டையை அழித்துக் கைப்பற்றிக் கொண்டான். கோட்டை அழிந்ததைக் கண்ட மறவர்கள் பாதுகாவல் நாடி ஓடிவிட்டனர்.

எழினி தன் தந்தையின் தலைநகரை மீட்கப் போராடினான்; ஆனால், போரில் கொல்லப்பட்டான்.

குட்டுவன் தகடூரைத் தாக்கிக் கொளுத்தினான் என்றும், அப்போது அவனை எதிர்த்துப் பேராடுவதற்கு ஆள் இல்லை என்றும் பரணர் குறிப்பிடுகிறார்[1]. பெருஞ்சேரல் தகடூரைத் தாக்கியபோது அவனுக்குத் துணையாக[2] வேந்தன் செங்குட்டுவனும் வந்திருந்து தகடூரை வென்ற செய்தியையே பரணர் இவ்வாறு கூறியுள்ளார். செங்குட்டுவன் தகடூரை அழித்துவிட்டு எதிர்ப்போர் இன்றி மீண்டான். பெருஞ்சேரல் கோட்டையில் தங்கியிருந்து ஆட்சிசெய்யத் தொடங்கிய போது எழினி தாக்கிய போர் மூண்டது என்றும், எனினும் சேரரே வெற்றி பெற்றனர் என்றும் கொள்வது பொருத்தமானது.

சேரன் செங்குட்டுவன், பெருஞ்சேரல் இரும்பொறை, அதியமான் ஆகியோர் சமகாலச் சேரர் குடியினர். இவர்கள் மூவரும் பனம்பூமாலை அணிபவர். செங்குட்டுவன் தந்தை நெடுஞ்சேரலாதனும் பெருஞ்சேரல் தந்தை செல்வக்கடுங்கோவும் பழனி மலைப் பகுதியில் ஆண்டவேள் ஒருவனின் இரண்டு பெண் மக்களைத் திருமணம் செய்து கொண்டதால் இவர்களிடையே உறவு நெருக்கமா யிருந்தது. எனவே, இருவரும் சேர்ந்து தம்மோடு உறவு நெருக்கம் இல்லாதவனும், தம் பகைவேந்தரான சோழ பாண்டியரோடு தொடர்பு கொண்டிருந்தவனுமாகிய அதியமானை சேரரின் கிளைக்குடியைச் சேர்ந்த அதியமானை - ஒழிக்கத் திட்டமிட்டு வெற்றிகண்டனர். செல்வக்கடுங்கோ வாழியாதனுக்கு இரண்டு ஆண்மக்கள் இருந்தனர் என்று குறிப்பிட்டோம். அவர்களுள் மூத்தவன் இங்குக் கூறப்பட்ட பெருஞ்சேரல் இரும் பொறை. இளையவன் ஒன்பதாம் பத்தின் தலைவனான இளஞ்சேரல் இரும் பொறையின் தந்தை. அவன் பெயரை ஒன்பதாம் பதிகம் 'குட்டுவன் இரும்பொறை' என்று குறிப்பிடுகிறது. பரணர் தகடூரில் பொருமுரண்


  1. அகம். 212 : 16 - 17
  2. அல்லது செங்குட்டுவனுக்குத் துணையாகப் பெருஞ்சேரல்