பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/94

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்

93


இருந்தாள் (வேள்விக்கு ஒப்பவில்லை). இவர்களுக்கு நாடாளத்தக்க ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அவனைக்கொண்டு இவ்வுலகில் உள்ள மக்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளை எல்லாம் இவன் செய்தான். அதாவது, இவன் மகன் அரசனாகவும் மக்கள் தொண்டனாகவும் விளங்கினான். இந்த நிகழ்ச்சி மனைவி இல்லாமல் கணவன் மட்டுமே வேள்வி செய்து மனைவி குழந்தையைப் பெற்றெடுத்த நிகழ்ச்சி ஆகையால், அரிசில்கிழார் என்னும் தமிழ்நெறியறிந்த புலவர்க்கு வியப்பை உண்டாக்கவில்லை. காரணம், வேள்விக்கும் குழந்தைப் பேற்றிற்கும் தொடர்பில்லை. புலவர்க்கு வியப்பை உண்டாக்கியது வேறொன்று இருந்தது. அது அவனிடமிருந்த நரைமூதாளனை அறிவு, தெளிவு பெறச் செய்ததேயாகும்.

பெருஞ்சேரல் இரும்பொறை பார்ப்பானைக் கொண்டு வேள்வி செய்தானல்லனோ? அப்போது அந்த வேள்வியால் பயனில்லை என்பதைத் தானே உணர்ந்திருந்தான். எனினும், நரை மூதாளனாய் உலகியல் முழுதும் உணர்ந்தவன்போல் அவனிடம் வாழ்ந்த பார்ப்பானின் மகிழ்ச்சிக்காகவே வேள்வி செய்தான். தன் படிவ நோன்புகளால் சித்துமுறையில் இருந்து குழந்தைப் பேற்றைப் பெற்றான். இந்தப் 'படிமைச் சித்துத் தவம்' உடையோர் கொடை, மாண்பு, உடல் உள்ள செல்வ வளம், எச்சமாகிய குழந்தைப் பேறு, தெய்வத்தன்மை ஆகியயாவும் கைவரப் பெறலாம் என்பதைத் தெளிவுபடுத்தினான். இவனிடம் தோற்ற நரைமூதாளப் பார்ப்பான் சேர நாட்டை விட்டே ஓடிவிட்டான். இந்தச் செயல் புலவரை வியப்புக்கு உள்ளாக்கியது.

பண்புநலம்

இவனது பண்புகள் குறித்து அரிசில்கிழார்[1] கூறுகிறார். இவன் போரை விரும்பும் உடல்வலிமை மிக்கவன். பிறர்க்கு இவன் துணையாவானே அன்றிப் பிறர் துணையை வேண்டுவதில்லை என்னும் அளவுக்குத் தன்நிகரில்லாதவன்[2] பகைவர்களுக்கு மடங்கல் தீப்போன்றவன்; சினம் மிக்கவன்;[3] போரில் இவன் தன் உயிரைப் போற்றுவதில்லை; பெரியோரைப் பேணுவான்; சிறியோரை அளி செய்து


  1. ஷை 72 : 5 - 7, 74 : 25 - 28, 79 : 1 - 3
  2. பதிற். 73 : 1 - 3
  3. ஷை 72 : 5 - 16