பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/95

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-1


காப்பாற்றுவான்;[1] புகழ்தரும் கல்வி நலம்சான்றவன்;[2] செம்மையான நாநலம் படைத்தவன்;[3] அளக்க முடியாத நற்பண்புகள் மிக்கவன்[4].

இவனது ஆண்மை நலம்[5] கண்டு உலகிலுள்ள ஆண்களின் ஆண்மை தேய்வுற்றது. தோளில் பூமாலையணிந்து மகிழ்வுடன் இவன் வாழ்ந்தான்[6]. பொன்மாலை அணிவதும் உண்டு[7]. புரவி பூட்டின தேரில் போர்க்களம் செல்வதும்,[8] கொடி பறக்கும் தேரில் பிற இடங்களுக்குச் செல்வதும்[9] இவன் வழக்கம். பல வேற்படைகளைத் தாங்கிச் செல்வதும், யானைமீது செல்வதும் உண்டு[10].

மனைவியின் மாண்பு

இவனது மனைவி அந்துவஞ்செள்ளை. அவள் மையூர் (மைசூர்) கிழான் என்னும் வேளிர் தலைவனின் மகள். அறல் போன்ற அழகிய நீண்ட கூந்தலை உடையவள் இவள்[11].

மனைவியர்

இவன் தன் மலர்மாலை குழைய மகளிர் பலரைத் தழுவி மகிழ்ந்தான் என்று கூறப்படுகிறது[12]. இதனால் அந்துவஞ்செள்ளையாகிய பட்டத்தரசியே அன்றிப் பிற மனைவியரும் இவனுக்கு உண்டு எனத் தெரிகிறது.

மகன்

பெருஞ்சேரல் சில காலம் மகப்பேறின்றி இருந்து தன் சித்துப் படிமைத் தவநெறியால் தன் பட்டத்தரசியின்பால் மகனைப் பெற்றான். அவன் நாடாளும் மன்னனாகவும் மக்கள் தொண்டனாகவும் விளங்கினான்[13]. இவன் பெயர் என்னவென்று தெரியவில்லை. நாடாண்ட செய்திபற்றி வேறு குறிப்பும் இல்லை. ஒருவேளை நாடாளத் தொடங்கும்போதே போரில் ஈடுபட்டு மாண்டிருக்க வேண்டும்.


  1. ஷை 79 : 3
  2. ஷை 80 : 17
  3. ஷை 79 : 5
  4. ஷை 79 : 8
  5. ஷை 79 : 6
  6. ஷை 79 : 7
  7. ஷை 75 : 3
  8. ஷை 80 : 13
  9. ஷை 73 : 15
  10. ஷை 75 : 2 - 3
  11. ஷை 74 : 3
  12. ஷை 79 : 6 - 7
  13. பதிற். 74 : 19 - 21