பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/96

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்

95


பாடின புலவர்

அரிசில்கிழார் என்னும் புலவர் இவனைப் பாடியுள்ளார். அரிசில் என்பது காவிரியின் கிளை ஆறாய்ச் சோழநாட்டில் பாயும் ஆறு. புகார் நாட்டில் இவன் வளர்ந்தபோது இப்புலவர் இவனுக்கு ஆசிரியராய் விளங்கியிருக்கக்கூடும்.

ஆட்சி ஆண்டு

பெருஞ்சேரல் இரும்பொறை 17 ஆண்டுகள் அரசாண்டான்[1].

இளஞ்சேரல் இரும்பொறை

பதிற்றுப்பத்து அமைப்பைக் காணும்போது இவன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறைக்குப் பின் அரசாண்டவன் எனத் தெரிகிறது.

பெற்றோர்

இவனது தந்தையின் பெயர் குட்டுவன் இரும்பொறை; தாயின் பெயர் அந்துவஞ்செள்ளை[2]. செள்ளை என்னும் சொல்லுக்குத் தாய் என்றும் பொருள் உண்டு. எனவே, அத்துவஞ்செள்ளை என்னும் பெயர் அந்துவனது தாய் என்னும் பொருளுடையதாக இருக்குமோ என்று எண்ண வேண்டியுள்ளது. ஆயின், இளஞ்சேரல் இரும்பொறைக்கு அந்துவன் என்னும் பெயர் கொண்ட மகன் ஒருவன் இருந்தான் என்றும், அவன் தன் பெயரில் தாயைக் குறிப்பிட்டு வழங்கும் அளவுக்குப் பெரும் புகழுடன் விளங்கினான் எனவும் கொள்ள வேண்டிவரும். இந்த அந்தவன் பற்றிய செய்தி எதுவுமே கிடைக்கவில்லை.

இந்த அந்துவஞ்செள்ளையின் தந்தை மையூர்கிழான். மையூர் கிழான் என்பது மையூர் (மைசூர்) மக்களின் தலைவன் என்று கொள்ளக் கிடப்பது. இவன் இளஞ்சேரல் இரும்பொறைக்கு அதாவது, தன் மருமகனுக்கு அமைச்சனாகவும் விளங்கினான்.


  1. ஷை பதி. 8
  2. பதிற். பதி. 9 : 1 - 2