பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-1


தன் அமைச்சுப் பணியில் மையூர்கிழான் உண்மையைப் பெரிதும் போற்றிக் கடைப்பிடித்து ஒழுகி வந்தான்[1]. இவனை இளஞ்சேரல் இரும்பொறை நல்ல அறிவுரை கூறிக் குறுநிலத் தலைவனாக விளங்கும்படி செய்தான்.

தனக்குத் துணையாகக் குறுநிலத் தலைவனாக விளங்கும்படி இவனைச் செய்ய நன்கு அறிவுரை கூறப்பட்டது என்ற செய்தி இவன் முன்பு இளஞ்சேரல் இரும்பொறைக்கு எதிராக நடந்து கொண்டிருக்க வேண்டும் என்பதைத் தெரிவிக்கின்றது. எனவே, இளஞ்சேரல் இரும் பொறை இவனுக்குத் தக்க அறிவுரை கூறித் தனக்குத் துணையாகக் குறுநிலத் தலைவனாக ஆக்கிக் கொண்டான். இவனது தந்தை இவனது மகளை மணந்து கொண்டதன் வாயிலாக உறவை வலுப்படுத்திக் கொண்டான்.

மையூர்கிழானின் அமைச்சு இளஞ்சேரல் அரசாட்சியிலா, மையூர் அரசாட்சியிலா என்பது தெரியவில்லை. யாண்டைய தாயினும் இவன் அமைச்சன் என்பது மட்டும் உறுதி. (எருமையூரன் வரலாற்றை ஈண்டு நினைவுகூர்தல் நலம்.)

நாடு

இளஞ்சேரல் இரும்பொறையின் மனைவி கொல்லிமலையில் மலர்ந்திருந்த காந்தள் மலரைச் சூடிக்கொண்டாள்[2]. நறவுத் துறைமுகப் பகுதியில் இவனது நாண்மகிழ் இருக்கை இருந்தது[3]. மகளிர் நீராடும் வானியாற்று நீரைக்காட்டிலும் இவன் இனிய தண்ணளி உடையவன்[4]. கொங்கர் கோ,[5] தொண்டியோர் பொருநன்,[6] மரந்தையோர் பொருநன்,[7] குட்டுவர் ஏறு,[8] பூழியர் மெய்ம்மறை,[9] பூழியர்கோ,[10] விரவுமொழிக் கட்டூர் வயவர் வேந்து[11] என்றெல்லாம் கூறப்படும் இவனைப்பற்றிச் செய்திகள் கொல்லிமலைப்பகுதி, நறவுத் துறைமுகம், வானியாற்றுப்படுகை, கொங்கு நாட்டுப் பகுதி, தொண்டித் துறைமுகப்பகுதி, மாந்தைத்


  1. 'மெய்யூர் அமைச்சியன் மையூர் கிழானைப் புரையறு கேள்விப் புரோசு மயக்கி' (பதிற். பதி.9 : 11 - 12)
  2. பதிற். 81 : 22
  3. ஷை 85 : 8
  4. ஷை 86 : 12 – 13
  5. ஷை 88 : 19, 90 - 25
  6. ஷை 88 : 21
  7. பதிற் 90 : 28
  8. ஷை 90 : 26
  9. ஷை 90 : 27
  10. ஷை 84 : 6
  11. ஷை 90 : 30