பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/98

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்

97


துறைமுகப்பகுதி, குட்ட நாட்டுப் பகுதி, பூழி நாட்டுப் பகுதி, கட்டூரைச் சூழ்ந்த பகுதி ஆகியவை இவனது நாட்டில் அடங்கியிருந்தது என்பதைப் புலப்படுத்தும். இந்தப் பரப்பளவு சேரநாட்டின் வடபகுதி என்று குறிப்பிடத்தக்கது.

விச்சிமலைப் போர்

இப்போது பச்சைமலை என வழங்கும் விச்சிமலைப் பகுதியை ஆண்டவன் 'விச்சிக்கோ'[1] எனப்பட்டான். இவன் அம்மலைப் பகுதியில் ஐந்தெயில்' என வழங்கப்பட்ட கோட்டையில் இருந்து கொண்டு அரசாண்டு வந்தான். இளஞ்சேரல் இரும்பொறை அந்தக் கோட்டையைத் தாக்கினான். விச்சி அரசனுக்கு உதவியாக இரண்டு அரசர்கள் சேர்ந்து கொண்டனர். அவர்கள் யார் எனத் தெரியவில்லை. பொதுவகையால் பாண்டியனும் சோழனும் சேரனுக்கு எதிராகப் போரிட்டனர் என்று கூறுவது வழக்கமாக இருந்துவருகிறது, போரில் 'ஐந்தெயில்' கோட்டை அழிந்தது. சேரன் வெற்றி பெற்றான். விச்சி அரசன் போரில் மாண்டான்.

பெருஞ்சோழன் வீழ்ச்சி

பெருஞ்சோழன்[2] என்பவன் கோப்பெருஞ்சோழன் என்று கொள்ளலாம். இவன் பொத்தியை[3] ஆண்டவன். இவனைச் சேரன் வஞ்சினம் கூறி வென்றான் என்று கூறப்படுகிறது. இவ்வாறு சேரன் இவன்மீது வஞ்சினம் கூறக் காரணம், இச்சோழன் விச்சிக்குத் துணையாக நின்றமையால் விளைத்திருக்கவேண்டும் என்று உய்த்துணரக்கிடக்கின்றது. சோழன் விச்சிக்குத் துணையாக இந்தச் சேரனை எதிர்த்து நின்றதை மேலே கண்டோம். பதிற்றுப்பத்துப் பாடலில்[4] இந்தச் சோழன் 'பெரும்பூண் சென்னியர் பெருமான்' என்று குறிப்பிடப் படுகிறான். போர் நடந்தபோது இந்தச் சோழனைத் தன்முன் கொண்டு வந்து நிறுத்துமாறு இளஞ்சேரல் இரும்பொறை தன் படைக்கு ஆணையிட்டான். படைவீரர்கள் முயன்றனர். சோழர் படையினர் அப்போது


  1. பதிற். பதி. 9 : 4
  2. ஷை 9 : 6
  3. 'பொத்தனூர்' என்னும் ஊரை ஆண்டவன். இவ்வூர் சேலம் மாவட்டம் வேலூரை அடுத்துக் காவிரி ஆற்றங்கரையில் உள்ளது.
  4. பதிற். 85 : 2 - 3