பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. பஞ்சசிகனும் பத்திரையும்

தேவலோகத்தில் இந்திர சபையில் ஆடல் பாடல்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்திர சபையில் நடன அரங்கத்தில் இசை யாசிரியராகவும் நடன ஆசிரியராகவும் இருந்து. கலைநிகழ்ச்சிகளை நடத்தியவர் தும்புரு. தும்புருவின் மகள் பத்திரை என்பவள். கட்டழகி; நடனம் ஆடுவதிலும் இசை பாடுவதிலும் யாழ் வாசிப்பதிலும தேர்ந்தவள். தும்புருவும் பத்திரையும் இந்திர சபைக்குப் போய்க் கொண்டிருந்தபோது வழியிலே அவர்களைப் பஞ்சசிகன் கண்டான். அவன் பத்திரை மேல் காதல் கொண்டான்.

இளைஞனான பஞ்சசிகன் இசை பாடுவதிலும் யாழ் வாசிப்பதிலும் வல்லவன். அவனுடைய யாழுக்கு 'பிலுவ பண்டு வீணை' என்பது பெயர். தேவேந்திரன் அவனைத் தன்னுடைய தூதனாக அமர்த்தி யிருந்தான். இந்திரன், யாரிடத்திலேனும் தூது அனுப்பக் கருதினால் பஞ்சசிகனைத் தூதனாக அனுப்புவது வழக்கம் பஞ்சசிகன் தூதுபோய் யாழ் வாசித்து இசைப் பாடித் தான் கருதிச் சென்ற காரியத்தை முடித்துக் கொண்டு வருவான். அதுபற்றி இந்திரனுக்கு அவனிடத்தில் மிகுந்த அன்பிருந்தது.

பஞ்சசிகன் அடிக்கடி விண்ணுலகத்திலிருந்து மண்ணுலகத்துக்குத் தூது செல்வது வழக்கம். இவன் மூலமாக மண்ணுலகத் தில் சிறப்பாக நடைபெறுகிற செய்திகளை அவ்வப்போது விண்ணுலகத்தில் இந்திரன் அறிந்துகொள்வது வழக்கம். பஞ்சசிகன் மண்ணுலகத்துக்கு வந்து நான்கு திக்குப் பாலகர்களைக் கண்டு அவர்கள் தெரிவிக்கும் மண்ணுலகச் செய்திகளை அறிந்துகொண்டு விண்ணுலகஞ் சென்று அச்செய்திகளை இந்திரனுடைய நண்பனும் தேரோட்டியுமான மாதலியிடம் கூறுவான். மாதலி அச்செய்திகளை இந்திரனுக்கு அறிவிப்பான். இவ்வாறு பஞ்சசிகன் மண்ணுலகத்துக்கும் விண்ணுலகத்துக்கும் தூதனாக இருந்தான்.

வழியில் பத்திரையைக் கண்டு அவள்மேல் காதல்கொண்ட பஞ்சசிகன் அவளைத் தனியாகச் சந்தித்துத் தன்னுடைய காதலை அவளிடம் கூறினான். ஆனால், அவள் அதற்கு இணங்கவில்லை.