பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. குட்டிலன்

-

காசி நகரத்து இசைவாணன்

மிகமிகப் பழங்காலத்திலே காசியைப் பிரமதத்தன் என்னும் அரசன் ஆட்சி செய்துகொண்டிருந்த காலத்தில் குட்டிலன் என்னும் இசைக் கலைஞன் அந்நகரத்தில் பேரும் புகழும் பெற்று விளங்கினான். குட்டிலன் இசைபாடுவதிலும் யாழ் வாசிப்பதிலும் வல்லவன். அவனுடைய இசைக் கலையை எல்லோரும் போற்றிப் புகழ்ந்தார்கள், பிரமதத்த அரசன் இக்கலைவாணனைத் தன்னுடைய அரண்மனைப் புலவனாக அமர்த்திச் சிறப்புச் செய்தான். குட்டிலனுடைய பெற்றோர் வயது சென்ற கிழவர்கள். வயது முதிர்ச்சியினால் பார்வையிழந்திருந்த அவர்களை மன மகிழச் செய்தான். அவர்களுடைய கட்டளையைத் தலைமேற் கொண்டு நடத்தினான். இவ்வாறு குட்டிலன் தன் வாழ்நாளைக் கழித்து வந்தான்.

காசியிலிருந்து வாணிகச் சாத்தர்கள் வெகு தூரத்திலுள்ள உச்சயினி நகரத்துக்குப் போய் சிலகாலந் தங்கி வாணிகஞ் செய்து பொருள் ஈட்டிக்கொண்டு காசி நகரத்துக்கு வருவது வழக்கம். அந்த வழக்கப்படி சில வாணிகர்கள் காசியிலிருந்து உச்சயினிக்குச் சென்று அங்குச் சில காலந் தங்கி வாணிகஞ் செய்தார்கள். வாணிகஞ் செய்து முடிந்தபிறகு அவர்கள் தங்கள் ஊருக்குத் திரும்பிச் செல்ல எண்ணினார்கள். புறப்படுவதற்கு முன்பு சில நாட்கள் தங்கி ஓய்வு எடுத்துக்கொண்டார்கள். குளித்து முழுகி நறுமணத் தயிலம் பூசி நல்லாடைகளை யுடுத்தி சுவையான உணவுகளை உண்டு மகிழ்ந்தார்கள். அந்த உச்சயினி நகரத்திலிருந்த முகிலன் என்னும் இசைவாணனை அழைத்துப் பொருள் கொடுத்து இசைக் கச்சேரி நடத்தினார்கள்.

முகிலன் யாழை இசைத்து வாசித்தான். அவன் இசைக் கலையில் தேர்ந்தவன் அல்லன். அவன் வாசித்த இசை அவர்கள் மனதைக் கவர வில்லை. ஆகவே, அவனுடைய இசையை அவர்கள் பாராட்ட வில்லை. அது கண்ட அவன் 'உச்ச நிலையில் இசைக்கிறது போலும், சற்று சுருதியை இறக்கி வாசிப்போம்' என்று எண்ணி நடுத்தரத்தில் அமைத்து இசைத்தான். அந்த இசையும் அவர்களுக்கு மகிழ்ச்சி