பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

ஆசிரியர் நரம்புகளை அறுத்துவிட்டு யாழ் வாசித்து இனிய பண் உண்டாக்குவதையும், மாணவன் நரம்புகளை அறுத்துவிட்டு யாழ் வாசிக்கும்போது பண் உண்டாகாததையும் சபையோர் கண்டு வியந்தார்கள். அவர் வாசித்த பண் மண்டபம் முழுவதும் இனிதாகக் கேட்டது. எல்லோரும் கேட்டு மகிழ்ந்தார்கள் . 'வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' என்று பாராட்டினார்கள். கடைசியாக குட்டிலர் வெறும் யாழின் மரச்சட்டத்தை வாசித்துப் பண் எழுப்பி இசை இசைத்தார். முகிலனும் யாழின் சட்டத்தை வாசித்தான். அதில் ஓசையும் பண்ணும் உண்டாக வில்லை.

அப்போது அரசன் கையை அசைத்துக் குறிப்புக் காட்டினான். 'முகிலன் இசையில் தோற்றான்' என்பது அதன் பொருள். சபையி லிருந்தவன் “நீ உன் ஆசிரியனுக்கு மாறாகத் துரோகம் எண்ணினாய். குருத் துரோகி” என்று அவனை வைதார்கள். சிலர் முகிலன் மேல் கல்லையும் கட்டையையும் எறிந்தார்கள். சிலர் அவனைப் பிடித்து இழுத்துக் கொண்டுபோய் நகரத்தின் குப்பை மேட்டில் தள்ளினார்கள். பிரமதத்த அரசன் குட்டில இசைவாணருக்குப் பரிசுகளை வழங்கிச் சிறப்புச் செய்தான். எல்லோரும் மகிழ்ந்து கலை வாணரைப் புகழ்ந்துப் போற்றினார்கள்.

தேவலோகத்தில் இந்திர சபையில் சக்கரன் தன்னுடைய சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தான். அப்போது அவனைச் சூழ்ந்திருந்த தேவர்கள் அவன் பூலோகத்துக்குச் சென்றிருந்த காரணம் என்னவென்று கேட்டார்கள். சக்கரன், மண்ணுலகத்திலே குட்டிலப் புலவருக்கும் முகிலனுக்கும் நடந்த இசைப் போட்டியை அவர்களுக்கு கூறினான். அப்போது அச்சபை யிலிருந்த அரம்பை, மேனகை முதலான நாடக மகளிரும் இசையாசிரியனாகிய சயந்தகுமரனும் குட்டிலரின் யாழிசையைத் தாங்களும் கேட்கவேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அவர்களுடைய விருப்பத்துக்கு இணங்கி சக்கரன் தன்னுடைய தேர்ப்பாகனாகிய மாதலியை அழைத்துத் தேரை மண்ணுலகத்துக்கு ஓட்டிக்கொண்டு போய் குட்டிலப் புலவரை அழைத்துக் கொண்டு வரும்படி கட்டளையிட்டான். அவ்வாறே மாதலி தேரை ஓட்டிக்கொண்டு போய் காசி நகரத்திலிருந்த குட்டிலக் கலைஞரை ஏற்றிக்கொண்டு இந்திர சபையில் கொண்டு வந்து விட்டான்.