பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

பௌத்தக் கதைகள் என்னும் பெயருள்ள இந்தக் கதைகள் கௌதம புத்தர் காலத்தில் நிகழ்ந்தவை. அவர் வாழ்க்கை வரலாற்றுடன் தொடர்புள்ளவை. மனித இயல்புக்கும் இயற்கைக்கும் உட்பட்ட நிகழ்ச்சிகள் இக்கதைகளில் கூறப்படுகின்றன. மக்கள் வாழ்க்கையில் நிகழ்கின்ற இன்ப துன்பங்களை இக்கதைகள் காட்டுகின்றன.

முற்காலத்திலே நமது நாட்டில் பௌத்த மதம் தோன்றி வளர்ந்து செழித்திருந்தது. பிற்காலத்திலே இந்த மதம் குன்றி மறைந்துவிட்டது. கவே, இந்த மதத்தைச் சார்ந்த பல கதைகளும் மறைந்துவிட்டன. தமிழ் இலக்கியம் பல துறைகளிலும் வளர வேண்டும் என்று கூறப்படுகின்ற இக்காலத்திலே, இத்தகைய கதைகளை வெளியிடுவது தகுதியே. நமது நாட்டாருக்கு இது போன்ற மறைந்துள்ள பழைய கதைகள் புதிய ‘விருந்தாக’ இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இக்கதைகளில் பல, சூத்திர பிடகத்துக்குக் குட்டக நிகாயப் பிரிவிலேயுள்ள தம்மபதம் என்னும் உட்பிரிவுக்கு, ஆசாரியர் புத்த கோஷர் எழுதிய தம்ம பதார்த்த கதா (தம்மபத அர்த்த கதை) என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டன. சில கதைகள், மேற்படி குட்டக நிகாயத்தின் மற்றோர் உட்பிரிவாகிய தேரி காதைக்குத் தமிழராகிய ஆசாரியர் தம்மபால மகாதேரர் இயற்றிய பரமார்த்த தீபனீ என்னும் அர்த்த கதையிலிருந்து எடுக்கப்பட்டன.

இந்நூலை அச்சிட்டு வெளிப்படுத்திய திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாருக்கு என் நன்றி உரியது.

மலரகம். மயிலாப்பூர் சென்னை

- மயிலை சீனி. வேங்கடசாமி