பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

இந்த நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் மாதவி பதினொரு விதமான ஆடல்களையும் நிகழ்த்தினாள். கொடுகொட்டியாடல், பாண்டரங்கக் கூத்து, அல்லிய ஆடல், மல்லாடல், துடிக்கூத்து, குடைக்கூத்து, பேடியாடல், மரக்காலாடல், பாவையாடல், கடையக்கூத்து என்னும் பதினொரு ஆடல்களையும் அவள் ஆடினாள்.

பதினொரு வகையான ஆடல்களை ஆடினபோது அந்தந்த ஆடல்களின் தலைவர்களாகிய சிவபெருமான், கண்ணபிரான், செவ்வேள் (முருகன்), காமன், கொற்றவை, திருமகள், இந்திராணி ஆகியவர்களின் வேடத்துடன் அவரவர்களின் ஆடையணிகளை அணிந்து ஆடிய காட்சியும் நடிப்பும் இசையும் பாட்டும் காண்பவரின் கண்ணையும் மனத்தையும் கவர்ந்து மகிழ்வித்தன. இவ்வாறு இந்திர விழா, மாதவியின் ஆடல்பாடல் நிகழ்ச்சிகளினால் சிறப்படைந்திருந்தது. இவளுடைய நாட்டியம், நடிப்பு, இசைப் பாட்டு முதலியவைகளைக் கண்டும் கேட்டும் மகிழ்ந்த நகர மக்கள் இவளுடைய கலைத் திறமையைப் புகழ்ந்து மெச்சினார்கள். இவளுடைய புகழ் பூம்புகார் நகரத்தில் மட்டுமல்லாமல் சோழ நாடு முழுவதும் பரவிற்று. அதற்கப்பால் பாண்டிய நாட்டிலும் சேரநாட்டிலும் பாரதநாடு முழுவதும் இவளுடைய புகழ் பரவிற்று.

பன்னிரண்டு ஆண்டுகளாகக் காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திர விழாவில் மாதவி ஆடல் பாடல்களை நிகழ்த்திக் கொண்டிருந்தாள். கோவலனும் அவளுடன் வாழ்ந்து வந்தான். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்து வளர்ந்து வந்தது. அந்தக் குழந்தைக்கு மணி மேகலை என்று பெயரிட்டு வளர்த்தார்கள். நாளொரு மேனியும் பொழு தொரு வண்ணமுமாக வளர்ந்து வந்த மணிமேகலை தன்னுடைய தாயான மாதவியைப் போலவே இசை நடனக் கலைகளைக் கற்று வந்தாள்.

பதியிலாராகிய கணிகையர் குலத்தில் பிறந்தவளானாலும் மாதவி நல்லொழுக்கமும் நற்குணமும் உள்ளவளாக இருந்தாள். கணிகையர் குலமகளிருக்கு இயற்கையான, காசு உள்ள செல்வரை நாடிச் செல்லும் இழிசெயல் இவளிடம் இருந்ததில்லை. பூவில் உள்ள தேனை யருந்தின வண்டு தேன் வற்றின பூவைவிட்டுத் தேன் உள்ள வேறு பூக்களை நாடிச் செல்வது போன்றது பதியிலாராகிய பொதுமகளிரின் செயல். ஆனால், மாதவியிடம் இந்த இழிச் செயல் இல்லை.