பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

இவை போன்ற அகப்பொருள் துறைப் பாடல்களை (காதற் பாடல்களை) மாதவி பாடியபோது - மீண்டும் ஊழ் வலிபோலும் கோவலன் இவள் வேறு யாரோ ஒருவனைக் காதலிக்கிறாள் என்று தன்னுள் கருதிக்கொண்டான். உண்மையில் இவர் இருவரும் எவ்வித மன வேறுபாடும் இல்லை என்றாலும் ஒருவரைப்பற்றியொருவருக்குத் தவறான எண்ணம் உண்டாய்விட்டது அவர்கள் அன்பில் குறை வில்லை. ஆனால், காரணம் இல்லாமலே அவர் களுக்கு ஒருவரைப் பற்றி ஒருவருக்குச் சந்தேகம் உண்டாயிற்று. ஆகவே கோவலன் மாதவியை விட்டுப் பிரிந்து போனான். தான் ஏழ்மையடைந்துவிட்ட படியால் மாதவி தன்னை வெறுத்து வேறு ஒருவனைக் காதலிப்பதாக அவன் தவறாகக் கருதினான்.

கோவலன் திடீரென்று பிரிந்து சென்றதன் காரணம் மாதவிக்குப் புரியவில்லை. தற்காலிகமாகப் பிரிந்துசென்றான். மீண்டும் வருவான் என்று அவள் எண்ணினாள். ஆனால், அவன் திரும்பவே இல்லை. அவன் வராமற் போகவே அவனுக்குக் கடிதம் எழுதித் தன் தோழி வயந்தமாலையிடங் கொடுத்து அனுப்பினாள். கோவலன் அந்தக் கடிதத்தை வாங்கிப் படிக்காமலே திருப்பியனுப்பிவிட்டான். அதனால் மாதவி பெரிதும் வருத்தம் அடைந்தாள்.

கோவலன் தான் இது வரையில் மறந்திருந்த மனைவியான கண்ணகியிடஞ் சென்றான். அவளிடமிருந்த செல்வங்களையும் கோவலன் முன்னமேயே செலவு செய்துவிட்டபடியால் இப்போது கண்ணகியிடம் காற்சிலம்புகள் மட்டும் எஞ்சியிருந்தன. கண்ணகி பெருஞ் செல்வனின் மகள் ஆகையால் அந்தச் சிலம்புகள் பொற் சிலம்புகளாக இருந்தன. அந்தக் சிலம்புகளை விற்று அந்தப் பணத்தை முதலாக வைத்து வணிகஞ் செய்து பொருள் ஈட்ட வேண்டுமென்று கோவலன் கருதினான். தான் செல்வச் சிறப்புடன் வாழ்ந்து வந்த காவிரி பூம்பட்டினத்திலே, இப்போதைய ஏழ்மை நிலையில் வாழ்வதற்கு அவன் விரும்பாமல் தொலைதூரத்தில் பாண்டிநாட்டு மதுரைக்குச் சென்று வாணிகஞ் செய்து வாழக்கருதினான். கோவலன் தன்னுடைய தற்போதைய ஏழ்மை நிலைமை மற்றவர்க்குக் காட்டாமல் மறைக்கவே, கோவலனும் கண்ணகியும் தம்முடைய உற்றார் உறவினர் நண்பர் முதலியோர் ஒருவருக்குஞ் சொல்லாமல் அவர்கள் இரவோடு இரவாக நகரத்தை விட்டுப் போய்விட்டார்கள்.