பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள் /219

போல இருக்கவேண்டும். நான் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக ஒருவருக்கும் தெரியக்கூடாது. எப்படியாவது உன்னுடன் இசை பாட அவளைச் சபைக்கு அழைத்து வா வா" என்று கூறி கூறி அவளை அனுப்பினான்.

மறுநாள் பாடினி வழக்கம் போல அரண்மனையில் அந்தப் புரத்துக்கு வந்தாள். புதியவளாகிய விறலியும் அங்கு வந்தாள். அரசிகளும் அரசனும் அங்கு இருந்தார்கள். அப்போது விறலி பாடினியை வம்புக்கு அழைத்தாள். “உனக்கென்னடி தெரியும்? இசை பாட வந்துவிட்டாய்; சங்கீதத்தில் உனக்கு 'அ' என்ற அட்சாரம் தெரியுமா? சரி கம பத நிசா தெரியுமா? என்னோடு இருந்து நீ இசை பாட முடியுமா? கற்றுக்குட்டிகளெல்லாம் இந்தக் காலத்தில் இசைபாட வந்துவிடுதுகள்” என்று இகழ்ந்து பேசி வம்புக்கு இழுத்தாள்.

குற்றம் எத்தனை, எத்தனை குணங்கள் யாழ்க் கோலுக்கு உற்ற தெய்வம் எது இசைப்பது எவ்வுயிர் உடம்பு உயிர்மெய் பெற்ற ஓசை எவ்வளவு அவைக் குத்தரம்பேசி

மற்றெனோடு பாடு. இல்லையேல் வசை உனக்கு என்றாள் விறலியின் இந்த வம்புப் பேச்சுக்கும் ஏசலுக்கும் விடை கூறாமல் பொறுத்துக்கொண்டு வாளா இருந்தாள். விறலி விடவில்லை. மேலும் மேலும் அவளை வைது தன்னுடன் இசைபாடி வெல்லும்படி அழைத்தாள். அது கேட்ட பாடினி, ‘நீ என்னை உன்னுடன் இசைபாட அறைகூவி அழைப்பதனால் நான் உன்னுடன் இசை பாடுவேன். பாடலாம் வா” என்று வாதுக்கு இசைந்தாள்.

அரசியுடன் இருந்து இதையெல்லாங் கேட்டுக் கொண்டிருந்த அரசன், தக்க சமயம் வாய்த்தது என்று எண்ணி அவர்களைச் சமாதானம் செய்வது போலக் கூறினான்.

'நீங்கள் இரண்டு பேரும் வாதாடுவது ஏன்? உங்களுடைய கலைத் திறமையைக் காட்ட விரும்பினால் சபையில் வந்து பாடுங்கள். யார் இசையில் வல்லவர் என்பதைச் சபை தீர்மானிக் கட்டும்?”

“அரசர் பெருமான் சொல்வதே சரி. நான் அதற்குச் சம்மதிக்கிறேன்” என்று கூறினாள் இலங்கை நாட்டு விறலி.

66

“நானும் சம்மதிக்கிறேன்” என்றாள் பாடினி.