பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. நீலகண்ட யாழ்ப்பாணர்

தமிழ்நாட்டில் பாணர் என்னும் இனத்தார் இசை பாடுவதிலும் யாழ் வாசிப்பதிலும் பழங்காலத்தில் பேர் பெற்றிருந்தார்கள். அந்தக் காலத்தில் யாழ் என்னும் இசைக்கருவி தமிழகத்தில் சிறப்பாக இருந்தது. யாழை வாசித்ததனால் அவர்களுக்கு யாழ்ப்பாணர் என்று பெயர் உண்டா யிற்று. பாணர் குலத்து மக்களும் இசைபாடுவதிலும் நாட்டியம் நாடகம் நிகழ்த்துவதிலும் வல்லவராக இருந்தனர். ஆகையால் அவர்கள் விறலியர் என்று பெயர் பெற்றிருந்தார்கள். அந்தக் காலத்தில் பாணர்கள், சமுதாயத்தில் நன்கு மதிக்கப்பட்டு அரசர்களிடத்திலும், செல்வந்த ரிடத்திலும் ஆடல் பாடல் நிகழ்த்திப் பரிசு பெற்று வாழ்ந்தார்கள்.

பாணர் குலத்திலே பிறந்தவர் நீலகண்ட யாழ்ப்பாணர். அவர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சோழ நாட்டில் எருக்கத்தம் புலியூரில் வாழ்ந்தவர். பண் பாடுவதிலும் யாழ் இசைப்பதிலும் வல்லவர். அவர், பாணர் குலத்தைச் சேர்ந்த மதங்கசூளாமணி என்னும் மங்கையை மணஞ் செய்து வாழ்ந்தார். மதங்க சூளாமணியும் நீலகண்டரைப் போலவே பண் பாடுவதிலும் யாழ் வாசிப்பதிலும் தேர்ந்தவர்.

பக்தி இயக்கம் பரவிக் கொண்டிருந்த காலம்அது. நீல கண்டரும் சிவபக்தர். ஆகையால் மதங்கசூளாமணியாருடன் சோழ நாட்டுக் கோயில்களுக்குப் போய் யாழ் வாசித்து இசை பாடிக் கடவுளை வணங்கினார். அவருடைய இசைப் பாட்டினாலும் யாழின் இனிய நாதத்தினாலும் மனங்கவரப்பட்டு மக்கள் திரள்திரளாகச் சென்று அவருடைய இசையமுதத்தைப் பருகி மகிழ்ந்தார்கள். ஊர்கள் தோறும் சென்று திருக்கோயில்களில் இசைபாடி பக்தி செய்து வந்தபடியால் அவருக்குத் திருநீலகண்ட யாழ்ப்பாணர் என்னும் சிறப்புப் பெயர் ஏற்பட்டது.

சோழ நாட்டுக் கோயில்களில் இசை பாடி முடித்த பிறகு திரு நீல கண்டர் பாண்டி நாட்டுக்குப் போய் மதுரையில் கோயில் கொண்டிருக் கும் சொக்கநாதப் பெருமானை வணங்கி, கோயிலின் வெளியே நின்று யாழ் வாசித்துப் பண் பாடினார். அவர் பாடின தேவகானத்தைக் கேட்டு மதுரை மக்கள் மனம் மகிழ்ந்தார்கள் அன்று இரவு சொக்கநாதப்