பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

பக்கத்தில் இருந்தவரைக் கேட்டார்கள். ஏமநாதனும் அவனுடை சீடர்களும் எப்போது எங்கே போனார்கள் என்பது அண்டை அயலாருக்கும் தெரியவில்லை. ஆனால் நேற்று மாலை அங்கு நடந்ததை அவர்கள் கூறினார்கள்.

விறகு வெட்டி ஒருவன் வந்து அந்த வீட்டுத் திண்ணை மேல் இருந்து இசைப் பாட்டுப் பாடினதையும் அதைக் கேட்டு எல்லோரும் வியந்துப் பாராட்டியதையும் வீட்டுக்குள்ளிருந்த இசைப் புலவன் ஏமநாதனும் வெளியே வந்து அந்த இசைப் பாட்டைக் கேட்டு அதிசயப் பட்டதையும் இன்னொரு முறை அவர் அந்தப் பாட்டை பாடச் சொல்லிக் கேட்டதையும் அந்த விறகு வெட்டி, தன்னைப் பாண பத்திரனின் சீடனாக இருந்து ஒதுக்கப்பட்டவன் என்று சொன்னதையும் அவர்கள் சேவர் களிடம் கூறினார்கள். இந்தச் செய்திகளையெல்லாம் சேவகர் அறிந்து கொண்டு விரைவாக மண்டபத்துக்குப் போய் அமைச்சரிடம் தாங்கள் கேட்ட செய்தியைக் கூறினார்கள். அமைச்சர் இதையெல்லாம் அரசனுக்குத் தெரிவித்தார். பிறகு அமைச்சரும் அரசரும் யோசித்து ஏமநாதன் மறைந்து போன காரணத்தை ஊகித்து அறிந்தார்கள்.

பாணபத்திரன் தன்னுடைய சீடனை, ஏமநாதன் இருக்கும் தெருவிற்கு அனுப்பி அவன் அறியும்படி இசைப்பாட்டுப் பாடும்படி செய்திருக்கிறான். அந்தச் சீடன் பாடின இசையைக் கேட்டு ஏமநாதன் பாணபத்திரனுடன் இசை பாடி வெல்ல முடியாது என்று பயந்து நள்ளிரவில் யாருக்கும் கூறாமல் ஊரைவிட்டுப் போயிருக்க வேண்டும் என்று அவர்கள் ஊகித்தறிந்தார்கள். பத்திரன் ஏன் அப்படிச்செய்ய வேண்டும்? தன் சீடனை விட்டுப் பாடச் செய்து ஏமநாதனை விரட்டியது தவறு என்று அரசன் பத்திரன் மேல் வெறுப்படைந்தான் சபையில் அமர்ந்திருந்த பத்திரனை அழைத்து இசைப் போட்டிக்கு நாள் குறித்திருக்கும்போது சபையில் வந்து இசைப் போட்டியில் பாடாமல் சீடனை அனுப்பிப் பாடச் செய்து ஏமநாதனை விரட்டியது ஏன் என்று வினவினான்.

பாணபத்திரனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவன் அரசனை வணங்கி “அரசர் பெருமானே தாங்கள் கூறுவது எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே!” என்றான்.