பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

வழியே நடந்தார். அந்த வழி அவரை ஆசிரமத்துக்குக் கொண்டு வந்து விட்டது. மனைவி மக்களை அவர் வெளியே நிறுத்திவிட்டு, அவர் மட்டும் குடிசையருகில் போனார். அங்குப் பலகையில் எழுதப் பட்டிருந்த வாசகத்தைக் கண்டு, கதவைத்திறந்து உள்ளே சென்றார். சென்று தமது வில்லையும் வாளையும் ஒருபுறம் வைத்துவிட்டுத் தமது ஆடை அணிகளைக் களைந்துவிட்டு அங்கிருந்த மரவுரி ஆடைகளை அணிந்துகொண்டார். பிறகு, துறவுக்கோலத்துடன் வெளியே வந்தார். மத்தி, அவர் காலில் விழுந்து வணங்கித் தானும் குடிசைக்குள் சென்று தமது ஆடை அணிகளைக் களைந்துவிட்டு மரவுரி ஆடைகளை அணிந்து கொண்டார். தமது மக்களுக்கும் மரவுரி ஆடையை உடுத்தினார். இவ்வாறு நால்வரும் வங்கமலைக் காட்டில் முனிவர் வாழ்க்கையை மேற்கொண்டனர்.

மத்தி, போதிசத்துவரிடத்தில் ஒரு வரம் வேண்டினார். “தாங்கள் குழந்தைகளுடன் ஆசிரமத்திலேயே தங்கி இருக்க வேண்டும்: நான் காட்டில் போய் கனி கிழங்குகளைக் கொண்டு வருவேன்” என்பதுதான் அவர் விரும்பிய வரம். அவர் அதற்கு இசைந்தார். அவரும், மத்தி யிடத்தில் ஒரு வரம் கேட்டார். "இப்போது நாம் துறவிகள். பிரமச்சரிய விரதம் காக்க வேண்டியவர்கள். இது முதல் நாம் தனித்த வாழ்க்கையை நடத்த வேண்டும்" என்பது தான் அவர் விரும்பிய வரம். மத்தியும் இதற்கு இசைந்தார்.

நாள்தோறும் காலையில் எழுந்தவுடன் இளவரசியாகிய மத்தி, ஏரிக்குப் போய் கைகால் கழுவுவதற்கும், பருகுவதற்கும் நீர் முகந்து கொண்டு வருவார். வீட்டு அறைகளைக் கூட்டித் துப்புரவு செய்வார். உணவு கொடுத்து மக்களைக் கணவருடன் விட்டு விட்டு, மண் வெட்டியும் கூடையும் எடுத்துக்கொண்டு காட்டுக்குப் போவார். பழங்களைப் பறித்தும் கிழங்குகளை அகழ்ந்து கொண்டும் மாலை நேரத்தில் வீட்டுக்குத் திரும்பி வருவார் வந்து குழந்தைகளை நீராட்டிக் குளிப்பாட்டுவார். பின்னர், நால்வரும் வாயிலண்டை அமர்ந்து பழங் களையும் கிழங்குகளையும் உண்பார்கள். அத்தாழம் அருந்திய பிறகு மத்தி, தமது மக்களை அழைத்துக் கொண்டு தமது குடிசையில் படுத்து உறங்குவார். போதிசத்துவர் தமது குடிசையில் தனியே படுத்து உறங்குவார். இவ்வாறு ஏழு திங்கள் கழிந்தன. அக்காட்டிலிருந்த பறவைகளும் மிருகங்களும் இவர்களுடன் அன்பாகப் பழகின.