பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. தசரத ஜாதகம்

பகவன் புத்தர் ஜேதவன ஆராமத்தில் இருந்தபோது, ஒரு குடும்பி, தன் தந்தை இறந்ததற்காக வருந்தியது பற்றி இக்கதையைச் சொன்னார். தனது தந்தை இறந்ததற்காக வருந்தி யாதொன்றிலும் மனம் செல்லாமல் தன் கடமையையும் தொழிலையும் செய்யாமல் இருந்தான் ஒரு குடியானவன். பகவன் புத்தர் விடியற்காலையில் யோகத்திருந்த போது இந்தக் குடியானவனின் பக்குவ நிலையையறிந்தார். பின்னர், சாவித்தி நகரத்தில் உணவுக்காகச் சென்றபிறகு தமது சீடர்களை யெல்லாம் தம் இருப்பிடத்திற்கு அனுப்பிவிட்டுத் தமது முதல் சீடருடன் குடியானவன் வீட்டுக்குப்போய் அவனுக்கு வாழ்த்துக்கூறி அமர்ந்தார். “நீர் வருத்தமாக இருக்கிறீர், அன்பரே!" என்றார். “ஆமாம், பகவரே! என்னுடய தந்தையின் பொருட்டு நான் பெரிதும் வருந்துகிறேன்” என்றான் குடியானவன். அதற்குப் பகவன் புத்தர் கூறினார்: “சாவகரே! முற்காலத்தில் இருந்த அறிஞர்கள் உலகத்தின் எட்டு வகையான இயல்புகளை நன்கு அறிந்து, தமது தந்தையார் இறந்தபோதும் சிறிதும் துயரம் அடையவில்லை." குடியானவன் அதைக் கூறும்படிக் கேட்டான். பகவன் இக்கதையைச் சொன்னார்.

1

முன் ஒரு காலத்தில், புகழ்படைத்த தசரதன் என்னும் அரசன், காசியில் இருந்து அரசாட்சி செய்தான். அவன் குடிமக்களின் துன்பங்களை நீக்கி நன்மைகளைச் செய்து நீதியோடு அரசாண்டான். அவனுடைய பதினாயிரம் மனைவியரில் மூத்த இராணியார் இரண்டு

ண்மக்களையும் ஒருபெண் மகவையும் பெற்றார். இவர்களில் மூத்த மகனுக்கு இராமபண்டிதர் (அதாவது: அறிஞனாகிய இராமன்) என்றும், இளைய மகனுக்கு இலக்கண குமரன் (அதாவது: அதிர்ஷ்டமுள்ளவன்) என்றும், பெண் மகளுக்குச் சீதை என்றும் பெயரிட்டார்கள். சில காலத் துக்குப் பிறகு, மூத்த இராணியார் இறந்து போனார். அரசன் மிகுந்த துயரங்கொண்டார். பின்னர், அமைச்சர்கள் கூறியதன் மேல் ஈமக் கடமைகளைச் செய்து முடித்தார். வேறு மனைவி பட்டத்தரசியானார். இந்த அரசியார், அரசனுக்கு உகந்தவர்; அவரால் பெரிதும் நேசிக்கப்பட்டவர். சில காலங் கழிந்தபிறகு, இந்த அரசியாருக்கு ஒரு மகன் பிறந்தான். அக்குழந்தைக்குப் பரதன் என்று பெயரிட்டனர்.