பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. சாம ஜாதகம்

பகவன் புத்தர் ஜேதவன ஆராமத்தில் இருந்தபோது, வறுமை யடைந்த தனது பெற்றோரைப் போற்றிவந்த ஒரு பிக்குவைப் பற்றி, இந்தக் கதையைக் கூறினார்.

சாவித்தி நகரத்திலே பதினெட்டுக் கோடி செல்வம் உள்ள ஒரு வணிகன் இருந்தான். அவனுக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். வாலிபனாகிய இந்த மகன் ஒருநாள் மாடிமேல் சாளரத்தின் அருகில் நின்று தெருவில் பார்த்துக் கொண்டிருந்தபோது கூட்டங்கூட்டமாக மக்கள் பூவையும் சந்தனத்தையும் எடுத்துக் கொண்டு போவதைக் கண்டான். அவர்கள் பகவன் புத்தருடைய உபதேசங்களைக் கேட்பதற்காக ஜேதவன ஆராமத்துக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். இந்த இளைஞனும் பூவும் சந்தனமும் எடுத்துக் கொண்டு ஆராமத்துக்குப் போய் பகவரை வணங்கி ஒருபுறம் அமர்ந்தான். பகவன் புத்தர் எல்லோருக்கும் அறவுரை கூறி உலகப் பற்றுக்களினால் வரும் துன்பங் களையும், வீட்டு நெறியின் மேன்மையையும் விளக்கி உபதேசம் செய்தார். கூட்டம் கலைந்துபோனபிறகு இந்த வாபன், தான் துறவு கொள்ள விரும்புவதாகப் பகவன் புத்தரிடம் சொன்னான். பெற்றோரின் சம்மதம் இல்லாமல் வாலிபருக்குத் துறவு கொடுக்க முடியாது என்று அவர் கூறினார். ஆகவே, அந்த இளைஞன் வீட்டுக்குப் போய் ஒருவாரம் வரையில் உணவு கொள்ளாமல் இருந்தான். அவன் பிடிவாதத்தைக் கண்ட அவன் பெற்றோர், அவன் துறவு பெறச் சம்மதம் கொடுத்தனர். அவன் புத்தரிடம் போய்த் துறவுபூண்டு பிக்கு ஆனான். பிறகு, குருவினிடம் சமயநூல்களை ஐந்து ஆண்டு கற்றுத் தேர்ச்சி யடைந்தான். பிறகு, யோகம் அப்பியசிக்கக் கற்றுக்கொண்டு ஊருக்கு அப்பாலுள்ள ஒரு காட்டுக்குப் போய் அங்கு பன்னிரண்டு ஆண்டு யோகம் செய்துகொண்டிருந்தான். ஆனால், யோகத்தில் சித்தி பெறவில்லை.

செல்வம் உள்ளவராக இருந்த இவனுடைய பெற்றோர்கள், காலப் போக்கில் ஏழையராயினர். நிலபுலங்களையும் வாணிகத்தையும் கவனிப்பதற்குக் குடும்பத்தில் தகுந்த ஆள் இல்லாதபடியால்,