பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

சேர்ந்து இவனும் காய்கனி கிழங்குகளைப் பறித்துக் கொண்டு மாலைநேரம் ஆனவுடன் ஆசிரமத்துக்கு வருவான். குளிர் காலத்திலே நெருப்பு மூட்டி அவர்களைக் குளிர்காயச் செய்வான். குளிப்பதற்கு வெந்நீர் வைத்துக் கொடுப்பான். அவர்களுக்கு உணவு கொடுத்து உண்டபின் மிகுந்ததைத் தான் உண்பான். இவ்வாறு சாமன் தனது பெற்றோருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான்.

அக்காலத்திலே வாரணாசி நாட்டை பிலியக்கன் என்னும் அரசன் ஆண்டு வந்தான். அந்த மன்னனுக்கு மான் இறைச்சி உண்பதில் அதிக ஆசை உண்டு. அவன் மான் வேட்டையாடுவதற்குப் புறப்பட்டு, அரசாட்சியைத் தன் தாயிடம் ஒப்படைத்துத் தன்னந்தனியே இமய மலைச் சாரலில் சென்று வேட்டையாடினான். வேட்டையாடிய அரசன் கடைசியில் மிகசம்மத ஆற்றண்டை தற்செயலாக வந்தான். அந்தத் துறை, சாமன் நாள் தோறும் நீர் எடுக்கும் துறையாகும். அங்கு மான்களின் காலடிச் சுவடுகளைக் கண்ட அரசன் வில்லும் அம்புமாக அங்கு மறைந்து இருந்து, மான்களின் வருகையை எதிர்நோக்கியிருந்தான்.

அப்போது சாமன் நீர் எடுப்பதற்காகக் குடத்துடன் ஆற்றங் கரைக்கு வந்தான். அவனுடைய பொன்நிறமான உடல் அமைப்பும், இளமையும், அழகும், வளமும் அரசனுடைய உள்ளத்தைக் கவர்ந்தன. அரசன் தனக்குள்ளே வியந்து இவ்வாறு எண்ணினான்: 'இங்கு நான் பலமுறை வந்திருக்கிறேன் இது வரையில் மனிதர் ஒருவரையும் இங்கு நான் கண்டதில்லை. தேவன்போலக் காணப்படுகிற இவன் யார்? நாக குமாரனா, அல்லது தேவ குமாரனா? இவனை யார் என்று அறிய அருகில் போவேனானால், தேவகுமாரனாக இருந்தால் சட்டென்று ஆகாயத்தில் மறைந்துவிடுவான்; நாக குமாரனாக இருந்தால் இமைக்குமுன் மண்ணுக்குள் மறைந்துவிடுவான். நான் நாட் டிற்குத் திரும்பிச் சென்றால், அமைச்சர்களும் மற்றவர்களும் இமயமலைச் சாரல் ஏதேனும் அதிசயத்தைக் கண்டீரா என்று கேட்பார்கள். ஒரு தெய்வகுமாரனைக் கண்டேன் என்று சொன்னால் அவன் பெயர் என்ன என்று கேட்பார்கள். அவன் பெயர் தெரியாது என்று கூறினால் என்னை ஏளனம் செய்து நகைப்பார்கள். ஆகவே, இந்தத் தெய்வீக ஆள் மறைந்து விடாதபடி முதலில் இவனை அம்பு எய்து காயப்படுத்தி விழச்செய்து பிறகு இவனைப்பற்றிய செய்தியை அறிவேன்.'