பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

45

திலும், கடமை மறவாமல் அறநெறியுடன் நடந்து கொள்க. நகர மக்களுக்கும் உன் கடமையைச் செய்து நன்மை செய்க. பறவைகளிடத்திலும், விலங்குகளிடத்திலும் அன்புடன் இருக்கவேண்டும். எல்லாரிடத்திலும் அறநெறியோடு அன்போடு கடமையைச் செய்து நன்மை புரிந்தால் இம்மையில் புகழும் நன்மையும் மகிழ்ச்சியும் பெறலாம். மறுமையிலும் நற்கதி கிடைக்கும்" என்று கூறியபின் போதி சத்துவராகிய சாமன் ஐந்து ஒழுக்கங்களையும் கூறினார்.

"பொய் பேசாதே. பொய் பேசுவது பாவமாகும். பொய்யை ஒழித்து மெய் பேசவேண்டும். மயக்கந்தருகிற கள் முதலிய மது பானங்களை அருந்தாதே. மது உண்டால் அறிவு மயங்கும். அறிவு மயங்கினால், நன்மை தீமைகளை உணர முடியாமல் பாவமும் தவறும் செய்ய நேரிடும். விபச்சாரம் செய்வது பாவம்; பிறர்மனை விரும்பாமல் கற்புடன் இருப்பது புண்ணியம். பிறர் பொருளை விரும்பாதே. பிறர் பொருளைக் களவுசெய்வது இழிவும் பாவமும் ஆகும். உயிரைக் கொல்லாதே. எல்லா உயிரையும் அன்புடன் நேசித்து உயிர்களைக் காத்தல் மேலான புண்ணியம்.’

இவ்வறநெறிகளைக் கேட்டு அரசன் வணங்கி விடைபெற்றுக் கொண்டு தன் நாடு சென்றான். சென்று அறநெறிப்படி நடந்து எல்லோருக்கும் நன்மை செய்து பேரும் புகழும் படைத்து வாழ்ந்தான். போதிசத்துவராகிய பொன்னன் சாமனும் தனது தாய் தந்தையருடன் ஆசிரமம் சென்று, தனது பெற்றோருக்குப் பணிவிடை செய்து கொண்டும், தபசு செய்து கொண்டும் நெடுங் காலம் இருந்தான். கடைசியில் யாவரும் இவ்வுலக வாழ்வை நீத்துத் தெய்வப் பிறப்பை யடைந்தார்கள்.

இந்த கதையைச் சொன்னபிறகு பகவன் புத்தர், “பிக்குகளே! அறிஞர்கள் தமது பெற்றோரைக் கைவிடாமல் போற்றிக் காப்பாற்றுவது தொன்றுதொட்டுள்ள வழக்கம்” என்று கூறினார். பிறகு, அந்தப் பிறப்பிலும் இந்தப் பிறப்பிலும் உள்ள தொடர்பை விளக்கினார். அப்பிறப்பில் அரசனாக இருந்தவர் ஆனந்தர், தெய்வ மகளாக இருந்தவர் உப்பலவன்னை, சக்கனாக இருந்தவர் அநுருத்தர், தகப்பனாக இருந்தவர் கஸ்ஸபர், தாயாக இருந்தவர் பத்தா காபிலானி, பொன்னன் சாமனாக இருந்தவர் நான்தான் என்று விளக்கினார்.