பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

55

யோசித்தார்கள். காலஞ்சென்ற அரசர் பெருமான், சீவாலி குமாரியின் மனதுக்கு உகந்த ஆளை அரசனாக்கும்படிக் கூறினார். அரச குமாரி யின் மனதுக்கு உகந்தவர் யார்? என்று யோசித்தபோது, சேனைத் தலைவன் அரசகுமாரியின் மனதுக்கு உகந்தவனாக இருக்கக்கூடும் என்று கருதினார்கள். ஆகவே சேனாதிபதியை அழைத்துச் சீவாலி குமாரியிடம் அனுப்பினார்கள்.

சேனாதிபதி அரசகுமாரி இருந்த மாளிகைக்குச் சென்று வாயிலின் அருகில் நின்றார். இவர் வந்த காரியத்தை அறிந்து கொண்ட அரச குமாரி, அரசனுக்கு இருக்கவேண்டிய நுண்ணறிவு இருக்கிறதா? என்பதைச் சோதித்துப்பார்க்க எண்ணினாள். எண்ணி, "சேனாதி பதியே இங்கு வாருங்கள்” என்றாள். உடனே சேனாதிபதி விரைவாகப் படிகளை ஏறிப்போய் மாடியின்மேல் அரசகுமாரியின் அருகில் நின்றார். அரசகுமாரி, “கீழே போங்கள்" என்றாள். உடனே விரைவாகக் கீழே இறங்கித் தரையில் நின்றார். "இங்குவந்து என் காலைப் பிடியும்” என்றாள். சேனாதிபதி அப்படியே செய்தார். அரசகுமாரி, அவரை மார்பிலே காலால் உதைக்க, அவர் மல்லாந்து விழுந்தார். அப்போது அரசகுமாரி, ‘இந்த அறிவற்ற மூடனைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுங்கள்' என்று கூறுவதுபோல தனது அருகில் இருந்த சேடி மார்களுக்குக் கண்ணினால் குறிப்புக் காட்டினாள். அப்படியே அவர்களும் அவரை விரட்டித் துரத்தினார்கள்.

66

"சேனாதிபதியே, என்ன செய்தி?” என்று அமைச்சர்கள் அவரை வினவினார்கள். “என் செய்தியைக் கேட்காதீர்கள். அரச குமாரி மானிடப்பெண் அல்ல" என்றார் சேனாதிபதி. பிறகு பொக்கிஷ அமைச்சரை அனுப்பினார்கள். அவருக்குப் பிறகு கொற்றக்குடை அதிகாரியை அனுப்பினார்கள். பின்னர், கொற்ற வாள் அதிபதியை அனுப்பினார்கள். எல்லோரும் சென்று அரச குமாரியிடம் அவமானம் அடைந்து வந்தனர்.

அமைச்சர்கள் மறுபடியும் சபைகூடி யோசித்தார்கள். அரச குமாரியை மகிழ்விப்போர் ஒருவரும் இலர். ஆயிரம்பேர் சேர்ந்து வளைக்கக்கூடிய வில்லை, ஒருவனே வளைக்கக் கூடியவன் யார்? அவனைக் கண்டறிந்து அரசாட்சியை அவனுக்குக் கொடுப்போம் என்று சிந்தித்துப் பறையறைந்து தெரிவித்தனர். ஒருவராலும் வில்லை வளைக்க முடியவில்லை. பிறகு அமைச்சர்கள் பதினாறு நிதிகளைக் கண்டெடுப்போரை அரசனாக்குவதாகப் பறையறைவித்தனர். ஒருவராலும் கண்டெடுக்க முடியவில்லை.