பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. அசம்பதான ஜாதகம்

பகவன் புத்தர் வெளுவன ஆராமத்தில் இருந்தபோது தேவ தத்தனைப்பற்றி இக்கதை சொல்லப்பட்டது. தேவதத்தனின் நன்றியற்ற தன்மையையும் பகவருடன் ஒன்றுபடாததையும் பற்றிப் பிக்குகள் தமக்குள் பேசிக் கொண்டிருந்தபோது, பகவன் புத்தர் அங்கு வந்தவர் இவர்கள் பேசுகிற பொருளைப் பற்றி அறிந்து, “தேவதத்தன் இப்போது மட்டுமல்ல, முற்பிறப்பிலும் நன்றியற்ற வனாக இருந்தான்” என்று கூறினார். பிக்குகள் அதை விளக்கிக் கூறும்படி கேட்டபோது, புத்தர் பெருமான் இந்தக் கதையைச் சொன்னார்:

முற்காலத்திலே இராஜகிருக நகரத்திலிருந்து மகத நாட்டை அரசர்கள் அரசாண்ட காலத்திலே, போதிசத்துவர் கோடீசுவரனாகப் பிறந்து நிதியமைச்சராக இருந்தார். எண்பதுகோடிப் பொன் உடைய அவர் கோடீசுவரன் என்னும் பெயர்பெற்றுச் சிறப்பாக வாழ்ந்திருந்தார். அதே காலத்தில் வாரணாசி நகரத்திலும் பிலியன் என்னும் பெயருள்ள நிதியமைச்சர் கோடீசுவரன் என்னும் பெயரோடு வாழ்ந்திருந்தார். கோடீசுவரர்களான போதிசத்து வரும் பிலியனும் நண்பர்களாக இருந்தார்கள். இப்படி இருக்கும்போது வாரணாசியில் இருந்த பிலியன், தன்னுடைய பொருளையெல்லாம் இழந்து ஏழையாகி வறுமையடைந் தான். வறுமை நிலையில் அவனுக்கு உதவி செய்வோர் ஒருவரும் இல்லை. ஆகவே, பிலியன் வாரணாசியை விட்டுத் தன் மனைவியுடன் புறப்பட்டுப் கால்நடையாக நடந்துகடைசியில் இராஜ கிருக நகரத்திற்கு வந்தான். வந்து போதிசத்துவராகிய தனது கோடீசுவர நண்பனைக் கண்டான். போதிசத்துவர் பிலியனுடைய நிலைமையையறிந்து, அவனை வரவேற்று அன்புடன் உபசரித்தார். பிறகு, பிலியன் வந்த காரியத்தை வினவினார்: “நான் என் செல்வங்களை எல்லாம் இழந்து வறுமையடைந்தேன். ஏழையாகிய நான் தங்களிடம் உதவிபெற வந்தேன்” என்று சொன்னான் பிலியன். “அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். நான் உதவி செய்வேன்” என்று போதிசத்துவர் கூறி, தனது பண்டாரத்தைத் திறந்து, தமது செல்வத்தின் செம்பாதியாகிய நாற்பது கோடி பொன்னை யெடுத்துப் பிலியனுக்குக் கொடுத்தார். மேலும், தமது ஆடுமாடுகளையும் நிலங்களையும் அடிமை ஆட்களையும்