பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

அளந்தபிரான் அமரும்இடம் அரிமேய விண்ணகரம்’

113

என்று திருமங்கையாழ்வாரும் அருளியபடி, இந்தச் சிற்ப உருவம் மிக எழில்பட அமைந்திருக்கிறது.

16. அநந்தசயனமூர்த்தி : அநந்தசயன மூர்த்தியின் கம்பீரமான அழகிய சிற்பம், மகிஷாசுரமண்டபம் என்னும் குகைக்கோயிலின் பாறைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டிருக்கிறது.

உயரமான மஞ்சம்போல் அமைந்திருக்கிற ஆதிசேஷன்மேல் திருமால் காலைநீட்டி மல்லாந்துபடுத்து அறிதுயில் (யோகநித்திரை) செய்கிறார். ஆதிசேஷனுடைய ஐந்து தலையுடைய படம் குடை போல நிழல் செய்கிறது. அறிதுயில் கொள்ளும் திருமால் இரண்டு கைகளுடன் காணப்படுகிறார். வலது கையைப் படுக்கைமேல் நீட்டி இடது கையின் முழங்கையைத் தூக்கி, பாம்புப்பாயலின்மேல் சுகமாகப்படுத்திருக்கும் செவ்வி அழகாயிருக்கிறது. மணி மகுடம் தரித்த திருமுடியும் ஆழ்ந்த சிந்தனையுடன் அமைதியாக இருக்கிற முகமும் இனிய காட்சியாக இருக்கின்றன. அரையில் வேட்டி தரித்துக் கால்களை நீட்டிப் படுத்திருக்கிறார். இவ்விதமாக அறிதுயில் கொள்ளும் மாயோனுடைய சிற்ப உருவம் பார்ப்பவர் மனத்தைக் கவர்கிறது.

இவருடைய கால்பக்கத்தில் இரண்டு வீரர்கள் கனமான ஆயுதத்தைக் கையில் தாங்கி நிற்கிறார்கள். அவர்கள் மிடுக்கும் முரட்டுத்தனமும் வன்கண்மையும் உடையவராகத் தோன்றுகின்றனர். இவர்கள் கனமான கதாயுதத்தைத் தமது இரண்டு கைகளாலும் தூக்கி, திருமாலை அடித்துக் கொல்லப்பார்க்கிறார்கள். இந்த வீரர்கள் மது, கைடபன் என்னும் பெயருள்ள அசுரர்கள், திருமால்துயில் கொண்டிருக்கும்போது, அவருடைய காதுகளிலிருந்து இவர்கள் தோன்றினார்கள் என்று புராணக்கதை கூறுகிறது.

பள்ளிகொண்டிருக்கிற திருமாலுக்குமேலே, ஆகாயத்தில் ரண்டு உருவங்கள் பறந்துசெல்வதுபோன்று காணப்படுகின்றன. இவற்றில் ஒன்று அழகான உடலையுடைய பெண் உருவம். இது துர்க்கையின் உருவம். இத்தெய்வம், திருமாலுடைய உடம்பின் ஒளியிலிருந்து உண்டாயிற்று என்று புராணக்கதை கூறுகிறது. இதற்குப் பக்கத்தில் உள்ள உருவம் பருத்துக் குறுகிய உடலை யுடையது. இது துர்க்கையின் பரிவாரமாகிய பூதகணமாகும்.