பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

வளைந்த கூர்மையான மூக்கும் இரண்டு இறக்கைகளும் உடைய கருடாழ்வான் உருவத்தைப் பெருமாள் கோயில்களில் நாம் கண்டிருக்கிறோம்.

ஆனால், இந்தக் கருடாழ்வானைப் பாருங்கள், இவனுக்குச் சிறகுகள் இல்லை; கருடப்பறவையின் கூரிய வளைந்த மூக்கும் இல்லை. முழுவதும் மனித உருவம் உடைய கருடாழ்வான். இந்தக் கருடன், பெருமாளுக்குப்பின்புறம் அடக்க ஒடுக்கமாகப் பயபக்தி யோடு நிற்கிற அமைப்பை வேறு எந்தச் சிற்பத்திலும் நீங்கள் கண்டிருக்க முடியாது. பயபக்தியையும் அடக்க ஒடுக்கத்தையும் இந்தக் கருடாழ்வான் உருவத்தில் அமைத்துக் காட்டிய அந்தச் சிற்பியின் திறனே திறன்!

கருடாழ்வானுக்கு அருகில் பெருமாள் நிற்கிறார். நீண்ட முடிதரித்து அரையிலிருந்து கணுக்கால் வரையில் வேட்டியணிந்து குண்டலம் முதலிய ஆபரணங்கள் விளங்கத் திருமால் காட்சி யளிக்கிறார். அவரது வலதுகை அபயங்கொடுக்கிறது. இடது கையைக் கருடாழ்வான் தோளின் மேல் தாங்கியிருக்கிறார். மற்ற வலதுகை இடது கைகளில் சக்கரமும் சங்கும் ஏந்தியிருக்கிறார்.

21. அரசனும் அரசியும்: நடுநாயகமாக அமைந்துள்ள கருடவாகனப் பெருமாளுக்கு வலதுபுறத்துக் கோட்டத்தில், ஒரு அரசனும் அரசியும் நிற்பது போன்ற சிற்பம் காணப்படுகிறது. இந்தச் சிற்பம் பல்லவ அரசனும் அவன் மனைவியாகிய அரசியும் என்று கருதப்படுகின்றது. இவர்களின் உருவ அமைப்பு காட்சிக்கு இன்பமளிக்கிறது. இதற்குப் பக்கத்துக் கோட்டத்தில் துவாரபாலகன் உருவம் அமைந்திருக்கிறது.

அழித்த சிற்பம்

கருடவாகனப் பெருமாளுக்கு இடது பக்கத்தில் உள்ள கோட்டத்திலும் ஆதிகாலத்தில் அரசன் அரசியின் உருவச் சிற்பம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இப்போது இந்தக் கோட்டத்தில் சிற்ப உருவம் இல்லை. இருந்த சிற்ப உருவங்கள் முழுவதும் செதுக்கி அழிக்கப்பட்டடுள்ளன. இந்தக் கோட்டத்தின் அடிப்புறத்தில், கருவறையிலிருந்து அபிஷேக நீர் வெளிவருவதற்காக ஒரு துளை அமைக்கப்பட்டிருக்கிறது. துளை அமைக்கப்பட்டதும் இந்தக்