பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

121

அமைந்திருக்கிறது. இவர்களின் உருவ அமைப்பும் எழில் பெற விளங்குகின்றன. அரச குலத்துக் கம்பீரமும் பெருமிதமும் இவர்கள் முகத்தில் மிளிர்கின்றன. இந்தச் சிற்பமும் பல்லவ அரசன் அரசியரின் தோற்றத்தைக் காட்டுகின்றன. இந்த அரசனும் தன் கையினால் சிவபெருமானைச் சுட்டிக் காட்டுகிறான்.

30. துவாரபாலகன் : அடுத்த கோட்டத்தில் இருப்பது துவார பாலகன் உருவம். இவன் இடது கையை இடுப்பில் வைத்து நின்று வலது கையினால் அரசன் அரசியையும் சிவபெருமானையும் சுட்டிக் காட்டுகிறான். இவன் தோளின்மேல் சாமரையை வைத்திருக்கிறான்.

"

இந்தக் கருவறைக்கு மேலே மாடியில் இருக்கவேண்டிய திருவுண்ணாழிகை அறை, குடைந்து அமைக்கப்படவில்லை. ஆனால், அக் கருவறையின் வெளிப்புறச் சுவர்கள் நன்கு அமைக்கப் பட்டு வாயில்கள் நான்கு பக்கங்களிலும் காட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாயிலின் இரண்டு பக்கத்திலும் அரசன் அரசியரின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தர்மராச இரதத்துச் சிற்பங்கள்

இது மூன்று நிலையுள்ள மாடக்கோயில். மேற்கு நோக்கியுள்ள இந்தக் கோயிலின் தரைப்பகுதியை முதலில் கவனிப்போம். திருவுண்ணாழிகை (கருவறை) அமைக்கப்படவில்லை. அர்த்த மண்டபம் அரைகுறையாக அமைக்கப்பட்டுள்ளது; கருவறையைச் சுற்றி வலம்வருவதற்கு அமைக்கப்படவேண்டிய இடைகழியும் அமைக்கப்படவில்லை. ஆனால், இடைகழியின் நான்கு பக்கங் களிலும் இருக்க வேண்டிய தூண்கள் - இவை சிங்கத் தூண்கள் அரைகுறையாக அமைக்கப்பட்டுள்ளன. எனவே, இக்கோயிலின் அடிப்புறம் சரிவர அமைக்கப்படவில்லை ஆனால், இப்பகுதியின் நான்கு பக்கங்களின் கோடிகளிலும் கோஷ்ட பஞ்சரங்கள் அமைக்கப்பட்டு, அப் பஞ்சரங்களில் தெய்வ உருவங்கள் புடைப்புச் சிற்பமாக அழகாக அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருபக்கத்தின் இருகோடியிலும் இரண்டு சிற்பம் வீதம் நான்குபக்கத்துக்கு எட்டுச் சிற்ப உருவங்கள் உள்ளன. அவற்றை விளக்குவோம்.

31. சிவபெருமான் : மேற்குப்புறத்து இருகோடியிலும் உள்ள சிற்பங்களை :- தென்கோடியில் உள்ளது: சிவபெருமான் திருவுருவம்;