பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

பல தெய்வ உருவங்களின் இனிய காட்சியைக் கண்டு மகிழ்வார்கள். இங்குள்ள சிற்ப உருவங்களை விளக்கிக் கூறுவோம்.

கருவறையைச் சுற்றி வலமாக வரும்போது முதலில் வடக்குப் பக்கச்சுவரில் உள்ள சிற்ப உருவங்களைக் காண்கிறோம். இந்தச் சுவரை ஏழு கோட்டங்களாகப் பிரித்து ஒவ்வொரு கோட்டத்திலும் ஒவ்வொரு உருவம் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்ட்டிருக்கிறது.

9

38. கங்காதர மூர்த்தி : இந்தச் சிற்பங்களில் நடுநாயகமாக இருப்பது கங்காரமூர்த்தி. இதில் சிவபெருமான் நின்றவண்ணம் காட்சியளிக்கிறார். அவருடைய வலது கையில் ஏதோ ஆயுதந் தாங்கியிருக்கிறார். இடதுகையில், தமது சடா மகுடத்திலிருந்து ஒரு புரிசடையை எடுத்துப் பிடித்திருக்கிறார். அந்தச் சடையிலே வானத்தி லிருந்து ஆகாயகங்கை வந்து தங்குகிறது. கங்கையின் உருவம் பெண்ணின் உருவம்போலச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற கங்கா தர மூர்த்தியின் உருவம் வராகப் பெருமாள் குகைக்கோயிலிலும் இருக்கிறது.

39. கருடவாகனப் பெருமாள் : கங்காதர மூர்த்திக்கு வலதுபுறக் கோட்டத்தில் இருப்பது கருடவாகனப்பெருமாள். இது "அர்ச்சுனன் இரதம்” என்னும் கோயிலின் வடபுறச் சுவரில் காணப்படுகிறதுபோன்ற உருவம். திருமால் நின்றவண்ணம் வலதுகையில் சக்கரத்தையும் இடது கையில் சங்கையும் ஏந்தியிருக்கிறார். மற்றொரு வலது கையை அபயங்காட்டி, இன்னொரு இடதுகையைப் பக்கத்தில் தாழ்ந்து குனிந்து நிற்கும் கருடனுடைய தோளின் மேல் வைத்திருக்கிறார். கருடனுக்கு இறக்கையில்லை. கருடப்பறவையின் அலகுபோன்ற மூக்கும் இல்லை. முழு மனித உருவத்தோடு திருமாலின் பக்கத்தில் பயபக்தியோடு தாழ்ந்து குனிந்து மண்டியிட்டு நின்று, இடதுகால் தொடையின்மேல் இடதுகையை யூன்றி நிற்கிறான்.

40. காலசம்மார மூர்த்தி : இதற்கு வலது பக்கத்துக் கோட்டத்தில் இருப்பது காலசம்மார மூர்த்தி. சிவபெருமானுடைய காலடியில் காலன் (எமன்) விழுந்து செயலற்றுக்கிடக்கிறான். சிவபெருமான் சடாமுடியில் மண்டையோட்டை அணிந்து, காலைத்தூக்கி நடனம் ஆடுகிறார். அவருடைய வலதுகை, விரல்களை விரித்து வியப்புக்குறி காட்டுகிறது. இடதுகை விரல்களை நீட்டிக் காலனைச் சுட்டிக் காட்டுகிறது. மற்ற இரண்டு இடது வலது கைகளில் ஏதோ ஆயுதங்களை ஏந்தியிருக்கிறார்.