பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

127

50. கருடவாகனன் : மத்திய கோட்டத்தில் உள்ள திருமால் உருவத்திற்கு வலது பக்கத்துக் கோட்டத்தில் இருப்பது கருடவாகன மூர்த்தி. முன்பு கூறிய வடக்குச் சுவரில் உள்ள கருடவாகன மூர்த்தி உருவம் போன்றது.

51. காளிங்கமர்த்தனன் : இதற்கு வலது பக்கத்தில் இருப்பது கண்ணன் காளிங்கமர்த்தனக் காட்சி. காளிங்கன் உருவம் இதில் புதுமையாக அமைக்கப்பட்டிருக்கிறது. மேல் பகுதி மனித உருவமும் வயிற்றுக்குக் கீழ்ப்பகுதி பாம்பின் உடலும் அமைந்து காளிங்கன் காணப்படுகிறான். காளிங்கன் தலைக்குமேல் மூன்றுதலை நாகம் படம் எடுத்து நிற்கிறது. வருத்தத்தைக் காட்டும் முகத்துடன் தரையில் கைகளையூன்றிக் காளிங்கன் களைப்புடன் காணப்படுகிறான். கண்ணன் அவன்மேல் ஒரு காலை யூன்றி நின்று, இரண்டு கைகளினாலும் அவனது நீண்டு பருத்த பாம்புடலைத் தூக்கிப் பிடித்திருக்கிறார். இவ்வளவு அழகான காளிங்கமர்த்தனச் சிற்பத்தை வேறு எங்கும் காணமுடியாது.

52. சிவன் : இதற்கு வலது பக்கத்தில் உள்ள கடைசி கோட்டத்தில் உள்ளது. சிவபெருமான் உருவம். வலது கையில் கோடரியும் இடது கையில் சூலமும் ஏந்தி மற்றொரு வலது கையை அபயம் காட்டி இன்னொரு இடது கையில் பாம்பைப் பிடித்திருக்கிறார். சடையில் மண்டையோடும் நிலாப்பிறையும் அணிந்திருக்கிறார்.

53. சோமஸ்கந்தர் : இனி மூன்றாவது மாடிக்குச் செல்வோம். இங்கும், மேற்கு நோக்கிய சிறிய திருவுண்ணாழிகை இருக்கிறது. திருவுண்ணாழிகையில் முன்பு இருந்த சிவலிங்கத் திருவுருவம் இப்போது இல்லை. ஆனால், சுவரில் சோமஸ்கந்த உருவம் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. இதில், சிவபெருமான், கட்டில் போன்ற ஆசனத்தில் சுகாசனமாக அமர்ந்திருக்கிறார். திருமுடியில் பிறைச் சந்திரனை அணிந்திருக்கிறார். நான்கு திருக்கைகள் உள்ளன. இவருக்கு இடது பக்கத்தில் பார்வதியும் சுகாசன மூர்த்தமாக அமர்ந்திருக்கிறார். பார்வதிக்கு இரண்டு கைகள் மட்டும் உள்ளன. இருவருக்கும் இடையில் கந்தப் பெருமான் குழந்தை உருவமாகக் காணப்படுகிறார். இவர்களுக்குப் பின்புறம் பூதகணங்கள் சாமரை வீசுகின்றன.