பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகாபலிபுரத்து ஜைன சிற்பம்

முன்னுரை

மகாபலிபுரம் என்பது சென்னைப் பட்டினத்துக்குத் தெற்கே 30 மைலில், கடற்கரை ஓரத்தில் இருக்கிற சிறு கிராமம். இது செங்கற்பட்டு இரயில் நிலையத்திலிருந்து கிழக்கே பதினெட்டு மைல் தூரத்தில் இருக்கிறது. இக் கிராமத்திற்குச் சென்னையிலிருந்தும், செங்கற்பட்டிலிருந்தும் பஸ் வண்டிகள் போகின்றன. மாவலிவரம் என்றும் மகாபலிபுரம் என்றும் இதற்கு இப்போது பயர் வழங்கப்படுகிறது. இப் பெயரைக் கேட்டவுடனே மகாபலிச் சக்கரவர்த்தி கதை நினைவுக்கு வருகிறது. ஆனால், மகாபலிச் சக்கரவர்த்திக்கும் மகாபலிபுரத்துக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. பல்லவ அரசர்களுக்கு இந்தப் பட்டினம் முற்காலத்திலே துறைமுகப் பட்டினமாக இருந்தது. பல்லவ அரசர்களில் ஒருவனான நரசிம்ம வர்மன் என்னும் அரசன், தன்னுடைய சிறப்புப் பெயராகிய மாமல்லன் என்னும் பெயரை இந்த ஊருக்குச் சூட்டினான். ஆகவே இது மாமல்லபுரம் என்று வழங்கப்பட்டது. பிற்காலத்தில் இந்தப் பெயர் சிதைந்து மகாபலிபுரம் என்றும் மாவலிவரம் என்றும் வழங்கப்படுகிறது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னே, பல்லவ அரச காலத்தில் பெரிய துறைமுகப் பட்டினமாகச் சிறப்புடன் இருந்த இப் பட்டினம் இப்போது சிறு கிராமமாக இருக்கிறது. சிறிய கிராமமாக இருந்தாலும், இது உலகம் முழுவதும் பேர் பெற்றிருக்கிறது. அமெரிக்கா ஐரோப்பா கண்டங்களிலிருந்தும், சீனா, பர்மா, ஜப்பான், இலங்கை, ஜாவா, சுமாத்ரா முதலிய நாடுகளில் இருந்தும் சென்னைக்கு வருகிற யாத்திரிகர்கள் மகாபலிபுரத்திற்கு வந்து இங்குள்ள குகைக் கோயில்களையும் கற்றேர்களையும், பாறைகளில் செதுக்கப்பட்டுள்ள சிற்ப வேலைப்பாடுகளையும் கண்ணாரக்கண்டு மனமார மகிழ்ந்து செல்கிறார்கள். இந்தியா தேசத்தில், சிற்பக்கலைப் பெருமையினால் சிறப்படைந்துள்ள பல இடங்களில் மகாபலிபுரமும் ஒன்று. சென்னை அரசாங்கத்தார் ஞாயிற்றுக்கிழமைதோறும் மகாபலிபுரத்திற்கென்று