பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

147

மகுடம் காணப்படுகிறது. சிவன் ஜடா மகுடம் உடையவர். அல்லாமலும் இவ்வுருவத்தின் கையில் கதாயுதம் போன்ற ஆயுதம் காணப்படுகிறது. சிவனுக்குச் சூலம், மழு முதலிய ஆயுதங்கள் உண்டேயன்றிக் கதாயுதம் கிடையாது. எனவே இந்த உருவம் சிவனைக் குறிப்பது அன்று. முக்கியமான இன்னொரு விஷயத்தை இங்குக் கவனிக்க வேண்டும். அதாவது பகீரதன் தபசு என்னும் கதையில், கங்கை ஆகாயத்திலிருந்து பூமியில் மிக வேகமாக இறங்கியபோது சிவபெருமான் அக் கங்கையைத் தமது ஜடையில் தாங்கிக் கொண்டார் என்பது. அந்தக்காட்சி, இந்தச் சிற்பத்தில் காணப்படவில்லை. இந்தச் சிற்பம் பகீரன் தபசு என்னும் காட்சியைக் குறிப்பதாக இருந்தால், கங்காதரமூர்த்தியின் உருவம் இதில் இடம் பெற வேண்டும் அல்லவா? கங்காதரமூர்த்தியின் அழகான சிற்ப உருவங்கள், பல்லவ அரசர் காலத்தில் அமைக்கப்பட்டவை, இன்றும் பல இடங்களில் காணப்படுகின்றன. மகாபலிபுரத்திலே தருமராஜ ரதத்தின் மேல் நிலைச் சுவரிலே கங்காதரமூர்த்தியின் சிற்பம் அமைக்கபட்டிருக்கிறது. கங்காதரமூர்த்தியின் உருவம் இந்தச் சிற்பத்தில் ஏன் இடம் பெறவில்லை? கதைக்குப் புறம்பான யானை, நாகர்கள், தேவர்கள், பூதர்கள், தலையற்ற உடல்கள், தலைவணங்கி உட்கார்ந்திருக்கும் முனிவரின் உருவம், கோயில் இவைகள் ஏன் முக்கிய இடம் பெற்றிருக்கின்றன? இவைகளை எல்லாம் யோசிக்கும்போது இந்தச் சிற்பக்காட்சி, சிலர் கருதுவதுபோல பகீரதன் தபசைக் குறிக்கவில்லை என்றும் வேறு ஏதோ கதையைக் குறிக்கிறதென்றும் தெரிகிறது.

அப்படியானால் இந்தச் சிற்பக்காட்சி எந்தக் கதையைக்

குறிக்கிறது?

இந்தக் கேள்வி பல ஆண்டுகளாக என் மனத்தில் குடிகொண்டி ருந்தது. நெடுநாட்களாகச் சரியான விடை எனக்குக் கிடைக்கவில்லை. கடைசியாக, ஜைன நூல்களைப் படித்தபோது இக் கேள்விக்கு விடை கிடைத்தது! இந்தச் சிற்பம் ஒரு ஜைனக் கதையைக் குறிக்கிறது என்பதை அறிந்தேன். அந்த ஜைனக்கதைக்கும் இந்தச் சிற்பத்திற்கும் பலவகையில் நல்ல பொருத்தங்கள் இருப்பதைக் கண்டேன். மேலும் ஊன்றி நன்றாக ஆராய்ந்து பார்த்தபோது நிச்சயமாக இந்தச் சிற்பம் அந்த ஜைனக் கதையைத்தான் குறிக்கிறது என்னும் உண்மையைக் கண்டேன். என் கருத்தை, தென் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி சங்கத்தில் (Archaeological Society) (1947-ஆம் ஆண்டு ஜனவரி 21–