பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

-

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 12

ஆம் தேதி) பேராசிரியர் இராவ்சாகிப் A. சக்கரவர்த்தி நயினார் M.A. அவர்கள் தலைமையில் சுருக்கமாகப் படித்தேன். அஜிதநாதசுவாமி என்னும் இரண்டாவது ஜைன தீர்த்தங்கரர் புராணத்தில் கூறப்படுகிற சகரசக்கரவர்த்தியின் கதை இந்தச் சிற்பக் காட்சியில் அமைந்திருக்கிறது என்று விளக்கினேன். இந்தச் சகர சக்கரவர்த்திக் கதை

இராமாயணத்தில் கூறப்படுகிற சகர சக்கரவர்த்தியின் கதையல்ல. ஜைன புராணங்களில் கூறப்படுகிற ஒரு ஜைனக் கதையாகும். இந்தக் கதைக்கும் மகாபலிபுரத்துச் சிற்பத்துக்கும் பொருத்தங் காட்டுவதற்கு முன்பு, இந்தக் கதையை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தக் கதை தமிழில் ஸ்ரீ புராணத்திலும், ஜீவசம்போதனை என்னும் நூலிலும் சுருக்கமாகக் காணப்படுகிறது. இந்தியில் உள்ள திரிஸஷ்டி ஸலாகா புருஷ சரித்திரம் என்னும் நூலில் விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது. இந்த இந்தி நூலை Helen M. Johnson அம்மையார் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். Gaekwad's Oriental Series ஆக இது அச்சிடப்பட்டிருக்கிறது. அக்கதையைச் சுருக்கமாகக் கூறுகிறேன்.

சகர, சாகரர் கதை

ஜீத-சத்துரு என்னும் அரசன் பரத கண்டத்தை அரசாண் காலத்தில், அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர். மூத்தக் குழந்தைக்கு அஜிதன் என்றும் இளைய குழந்தைக்குச் சகரன் என்றும் அரசன் பெயரிட்டு வளர்த்தான். மூத்த குழந்தை வளர்ந்து வயதடைந்த பிறகு அஜிதநாதர் என்னும் தீர்த்தங்கரராக விளங்கி உலகத்திலே ஜைன மதத்தைப் பரவச்செய்து இறுதியில் வீடுபேறடைந்தார். இளைய பிள்ளையாகிய சகரன், பெரியவனாக வளர்ந்தது, தனது தந்தைக்குப் பிறகு அரசாட்சியை ஏற்றுப் பரத கண்டத்தின் சக்கரவர்த்தியாக விளங்கினார். இந்தச் சகரசக்கரவர்த்தி அரசாட்சி செய்துவருங் காலத்தில், ஒரு சமயம் கண்டப் பிரபாத மலைக்குத் தன் மந்திரி முதலியவர்களுடன் சென்று நாட்யமாலகன் (இந்திரன்) என்னும் தெய்வத்தைக் குறித்து மூன்று நாள் நோன்பிருந்தார். இவர் நோன்பிருப் பதைத் தன்னுடைய சிம்மாசனம் துளங்கியதனால் அறிந்த நாட்டிய மாலகன் என்னும் தெய்வம் சகரசக்கரவர்த்தியின் முன்பு தோன்றி, எண்ணிறந்த செல்வங்களைக் கொடுத்து சக்கரவர்த்திக்கு வேண்டிய உதவிகளை எந்த நேரத்திலும் செய்யச் சித்தமாயிருப்பதாகத் தெரிவித்தது. அந்த வரத்தை ஏற்றுக்கொண்ட சகரசக்கரவர்த்தி, தனது