பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டிடக் கலை*

அழகுக் கலைகளில் முதலாவதாகிய கட்டிடக் கலையை ஆராய்வோம். வீடுகள் மாளிகைகள் அரண்மனைகள் முதலியவை கட்டிடங்களே. ஆனால், நாம் இங்கு ஆராயப்புகுவது கோயில் கட்டிடங்களை மட்டுமே. முதலில் கோயில் கட்டிடங்கள் நமது நாட்டில் எந்தெந்தப் பொருள்களால் அமைக்கப்பட்டன என்பதை ஆராய்வோம்.

மிகப் பழைய காலத்திலே நமது நாட்டுக் கோயில் கட்டங்கள் மரத்தினால் அமைக்கப்பட்டன. அதன் பிறகு செங்கல்லினாலும் சுண்ணாம்பினாலும் கட்டிடங்கள் அமைக்கப்பட்டன. அதற்குப் பின்னர் பாறைகளைக் குடைந்து குகைக் கோயில்கள்' அமைக்கப் பட்டன. கடைசியாகக் கருங்கற்களைக் கொண்டு கற்றளிகள் அமைக்கப்பட்டன. கருங்கற்களை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டப்படுவது கற்றளி எனப்படும்.

மரக்கோயில்கள்

பழங்காலத்திலே கோயில்கள் மரத்தினால் கட்டப்பட்டன என்று கூறினோம். மரத்தைத் தகுந்தபடி செதுக்கிக் கட்டிடம் அமைப்பது எளிமையானது, பண்டைத் தமிழகமான இப்போதைய மலையாள நாட்டின் சில இடங்களில், இன்னும் கோயில்கள் மரத்தினால் கட்டப்பட்டிருப்பதைக் காணலாம். சிதம்பரத்தின் சபாநாதர் மண்டபம் இப்போதும் மரத்தினாலேயே அமைக்கப் பெற்றிருக்கிறது. சிதம்பரத்தில் ஊர்த்துவத்தாண்ட மூர்த்தி ஆலயம், பிற்காலத்தில் கருங்கல்லினால் கட்டப்பட்டது. கல்லினால் கட்டப்பட்டாலும், அதன் தூண்கள், கூரை (விதானம்) முதலிய அமைப்புகள் மரத்தினால் அமைக்கப்பட்டது போலவே காணப்படுகின்றன. சிதம்பரக் கோயிலின் பழைய கட்டிடங்கள் எல்லாம் மரத்தினாலே அமைக்கப்பட்டிருந்தன

  • தமிழர் வளர்த்த அழகுக்கலைகள் (1956) எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரை.