பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

பிறகு அவன் மகன் நரசிம்ம வர்மனான மாமல்லன், மாமல்லபுரத்தில் (மகாபலிபுரத்தில்) குகைக் கோயில்களையும் இரதக் கோயில்கள் என்னும் பாறைக் கோயில்களையும் அமைத் தான். அவனுக்குப் பிறகு வந்த பல்லவ அரசர்கள் சாளுவன்குப்பம் முதலிய இடங்களில் குகைக் கோயில் அமைத்தார்கள். பிறகு புதுக்கோட்டையிலும் பாண்டிய நாட்டிலும் குகைக் கோயில்கள் அமைக்கப்பட்டன. கி. பி. 850 - க்குப் பிறகு குகைக் கோயில்கள் அமைக்கும் வழக்கம் மறைந்து விட்டது.

கி. பி. 1000க்குப் பிறகு அரசாண்ட சோழ, பாண்டிய, விஜயநகர அரசர்கள் குகைக் கோயிலை அமைக்கவில்லை. அவர்கள் கற்றளிகளைத்தான் அமைத்தார்கள்.

சுவர் உறுப்புகள்

இனி, திருவுண்ணாழிகை (கருவறை) யின் சுவரில் வெளிப் புறத்தில் அமைக்கப்படும் உறுப்புகளைப் பற்றிக் கூறுவோம். கருவறைக்கு முன்புறத்தில் அதைச் சார்ந்து சிறு மண்டபம் ஒன்று உண்டு. இதற்கு அர்த்த மண்டபம் என்பது பெயர். அர்த்த மண்டபம் கருவறையின் ஒரு பகுதியேயாகும். அர்த்த மண்டபத்தின் வாயிலில் இருபுறத்திலும் துவார பாலகர் உருவங்கள் அமைக்கப் பட்டிருக்கும்.

திருவுண்ணாழிகை என்னும் கருவறை சுவரின் வெளிப் புறத்திலும், அர்த்த மண்டபச் சுவரின் வெளிப் புறத்திலும் கோஷ்ட பஞ்சரம், கும்ப பஞ்சரம் என்னும் உறுப்புகள் அமைக்கப்படுவது வழக்கம். கருவறையின் வெளிப் புறச் சுவர்களில், பின்புறச் சுவரில் ஒன்றும் வலப்புற இடப்புறச் சுவர்களில் ஒவ்வொன்றும் ஆக மூன்று கோஷ்ட பஞ்சரங்களும், கருவறையைச் சேர்ந்துள்ள அர்த்த மண்டபத்தின் வலப்புற இடப்புறச் சுவர்களின் வெளிப்புறத்தில் ஒவ்வொன்றும் ஆக இரண்டு கோஷ்ட பஞ்சரங்களும் ஆக ஐந்து கோஷ்ட பஞ்சரங்கள் அமைக்கப்படும்.

கோஷ்ட பஞ்சரம் என்பது சிற்பவேலைகள் அமைந்த மாடங்கள் ஆகும். கோஷ்ட பஞ்சரம் என்னும் இம்மாடங்களிலே கணபதி, தட்சணாமூர்த்தி, இலிங்கோத்பவமூர்த்தி, பிரமன், நாராயணி (கொற்றவை) உருவங்கள் அமைக்கப்பட்டிருக்கும். கோஷ்ட பஞ்சரங்களிலே இந்தத் தெய்வ உருவங்களை அமைக்கும் வழக்கம் சோழர் காலத்திலே கி.பி.10 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு ஏற்பட்டிருக்க