பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

ஆலயத்துடன் சேர்ந்து இராமல் தனியாக இருந்தது. உதாரணமாகக் காஞ்சீபுரத்துக் காமாட்சியம்மை ஆலயத்தைக் கூறலாம். நாயன்மார்கள் இந்தத் தேவி ஆலயத்தைக் குறிப்பிடுகிறார்கள். ஆனால், இந்த ஆலயம் சிவன் கோயிலில் சேராத தனி ஆலயம் என்பதை நினைவில் வைக்கவேண்டும்.

கி. பி. 10-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர், சோழ அரசரால் அம்மன் ஆலயங்கள், சிவன் கோயில்களில் அமைக்கப்பட்டன. அம்மன் ஆலயங்கள் புதிதாக அமைக்கப்பட்டதைக் கல்வெட்டுச் சாசனங்களினாலும் அறியலாம்.

Լ

சோழர்கள் காலத்திலே அடியார், நாயன்மார்களுக்கும் உருவங்கள் அமைக்கப்பட்டன. இந்த அடியார், நாயன்மார் உருவங்கள் கருவறைக்கு வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டுக் கருவறையைச் சூழ்ந்து மூன்று பக்கத்திலும் மண்டபங்கள் அமைக்கப்பட்டன. இவ்வாறு கருவறையைச் சுற்றிலும் மண்டபங்கள் அமைக்கப்பட்டபடியால், மூலக் கோவிலின் கட்டிட அமைப்பு முழுவதும் மறைக்கப்பட்டுவிட்டது. அன்றியும் மண்டபத்தில் சாளரம் அமைக்காதபடியால் பட்டப் பகலிலும் இருள் சூழ்ந்து கொண்டது. மூலக்கோயிலின் விமானம் மட்டும் தூரப்பார்வைக்குத் தெரியும். மூலக் கோயிலின் அதிஷ்டானத்திலும் (அடிப்புறம்), சுவரிலும் சிற்ப வேலைகள் அமைந்து அப் பகுதிகளே கட்டிடத்தின் அழகான பகுதிகளாக விளங்குபவை. அப்பகுதியைச் சுற்றிலும் மண்டபம் அமைத்து மறைத்துவிட்டதல்லாமல் இருள் சூழும்படியும் செய்து விட்டார்கள். இப்படிச் செய்தது மூலக்கோயிலின் அழகையே கெடுத்துவிட்டது. இப்போதுள்ள கோயில்களில் பெரும்பான்மையும் மூலக்கோயிலின் கட்டிட அழகை மறைக்கப்பட்டவையே. சுற்று மண்டபங்களால் மறைக்கப்படாத மூலக்கோயில்கள் மிகச் சிலவே இக் காலத்தில் உள்ளன.

அண்மையில், மிகப் பழைமை வாய்ந்த பாடல் பெற்ற ஒரு கோயிலுக்கு, அக் கோயிலின் அமைப்பை ஆராய்வதற்காகச் சென்றேன். மூலக் கோயிலின் முன்புறத்தில் மிகப்பெரிய முக மண்டபமும் அதனைச் சார்ந்து மூலக்கோயிலைச் சுற்றிலும் மண்டபங்களும் அமைந்து அக்கோயிலை மிகவும் இருளுடைய தாக்கிவிட்டது. இது எல்லாக் கோயில்களிலும் உள்ள சாதாரண நிலை.