பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

இதன் கருத்து:-

219

"மகேந்திரபுரத்தில் மகேந்திர தடாகக் கரையின் மேல், உலகத்தாரால் புகழ்ந்துரைக்கப் பட்டதும் மக்கள் கண்டு களிக்கும்படி அழகுக்கு உறைவிடமானதுமான முராரி (திருமால்) கிருஹத்தை மகேந்திர விஷ்ணுக்கிருகம் என்னும் பெயரினால் குணபரன் என்னும் அரசன் செய்வித்தான்.

இங்குள்ள ஏரிக்கு மகேந்திர தடாகம் என்றும், இக்குகைக் கோயிலுக்கு மகேந்திர விஷ்ணுக் கிருஹம் என்றும் பெயர் வழங்கின என்பதும், இவற்றை அமைத்தவன் குணபரன் என்னும் பெயரை யுடைய மகேந்திர விக்கிரமன் என்பதும் இதனால் அறியப்படு கின்றன.

7. மாமண்டூர்க் குகைக்கோயில்

காஞ்சிபுரத்திற்குத் தெற்கே ஆறுகல் தொலைவில் உள்ளது மாமண்டூர். இவ்வூர் ஏரிக்கரையில் உள்ள கற்பாறைக் குன்றில் இரண்டு குகைக் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை மகேந்திர வர்மனால், அல்லது மகேந்திரவர்மன் காலத்தில் அமைக்கப் பட்டவை, இந்தக் குகைக் கோயில்களுக்குத் தெற்கே, நரசபாளையம் அல்லது நரசபுரம் என்னும் ஊரைச் சார்ந்து வேறு இரண்டு குகைக் கோயில்கள் உள்ளன. அவை மகேந்திரன் காலத்திற்குப் பிற்காலத்தில் அமைக்கப் பட்டவை. ஆகவே, அவற்றைப் பற்றி இங்கு எழுதவில்லை.

காஞ்சிபுரத்திற்குத் தெற்கே மூன்று கல்லில் பல்லாவரம் என்னும் ஊரும், (இந்த ஊருக்கு அருகில் ஒரு குகைக் கோயில் உண்டு. குரங்கணின் முட்டத்துக் குகைக் கோயில் என்பது காண்க) அவ்வூருக்கு அருகில் தூசி என்னும் ஊரும். தூசிக்கு அருகில் மாமண்டூர் என்னும் ஊரும் உள்ளன. இந்த ஊர்களின் பெயர்களை ஆராய்வோம். பல்லாவரம் என்பது பல்லவபுரம் என்பதன் திரிபு. இவ்வூரில் பல்லவ அரச குடும்பத்தார் வசித்தார்கள் போலும் அதனால்தான் இப் பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும். இதற்குப் பக்கத்தில் உள்ள ஊரின் பெயர் தூசி என்பது. இது பல்லவர்களின் தூசிப்படை இருந்த ஊர் என்று கருதலாம் இதற்கு அப்பால் இருப்பது மாமண்டூர் என்பது. இவ்வூரில் பல்லவர்களின் யானைப்படை குதிரைப்படைகள் இருந்தனபோலும். மா என்றால் மிருகம் என்றும் குதிரை, யானை என்றும் பொருள்படும்.