பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

223

பெயரா இயற்பெயரா என்பதும் தெரியவில்லை. இவன் பல்லவ குடும்பத்தைச் சேர்ந்த சிற்றரசனாக இருக்கக்கூடும் என்றும், இவன் மகேந்திரவர்மன் காலத்தில் இருந்திருக்கக்கூடும் என்றும் கருதுகிறார்கள். இந்தக் குகைக்கோயிலின் அமைப்பும் இதில் எழுதப்பட்டுள்ள சாசன எழுத்தின் அமைப்பும் கி. பி. 7 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முதலாம் மகேந்திரவர்மன் காலத்து அமைப்பைப் போன்றிருக்கிறபடியினால், இந்தக் குகைக் கோயில் மகேந்திரவர்மன் காலத்தில் அமைக்கப்பட்டது என்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.

9. சித்தன்னவாசல் குகைக்கோயில்

புதுக்கோட்டையைச் சேர்ந்த குளத்தூர் தாலுகா சித்தன்ன வாசல் என்னும் கிராமத்துக்குக் கிழக்கே அரைமைல் தூரத்தில் உள்ள குன்றின்மேல், கற்பாறையைக் குடைந்து அமைக்கப் பட்ட ஒரு குகைக்கோயில் உண்டு. இது சமணசமயக் கோயில். இக் குகைக்குள் எழுதப்பட்டுள்ள பழைய ஓவியங்களினாலே இக்கோயில் உலக மெங்கும் பேர்பெற்றிருக்கிறது. இந்தக் குகைக்கோயிலை அமைத்த வன் மகேந்திரவர்மனே. இவன் அமைத்த சமணசமயக் கோயில் இது ஒன்றே.

மகேந்திரவர்மன் அமைத்த ஏனைய குகைக்கோயிலைப் போலவே இக்கோயிலும் முன்மண்டபத்தையும் அதன் மத்தியில் ஒரு கருப்பக்கிருகத்தையும் உடையது. மண்டபத்தின் நீளம் 22 அடி 10 அங்குலம்; அகலம் 11 அடி 6 அங்குலம். இந்த மண்டபத்தில் இரண்டு தூண்கள் உள்ளன. மண்டபத்தின் மத்தியில் பாறையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ள திருநிலையறை 10 1/2 அடி சதுரமாக அமைந் துள்ளது. இவ்வறையின் வாயிலின் உயரம் 5 அடி 7 அங்குலமும், அகலம் 2 1/2 அடியும் உள்ளது.

7

திருநிலையறையின் உள்ளே அருகக் கடவுளின் மூன்று திருமேனிகள் முக்குடையுடன் அமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் இரண்டு கோடிகளிலும் இரண்டு ஜைன உருவங்கள் ஒன்றுக் கொன்று எதிராக அமைக்கப்பட்டுள்ளன. வடபுறத்தில் உள்ளது குடையுடனும், தென்புறத்தில் உள்ளது ஐந்தலை நாகத்துடனும் காணப்படுகின்றன.