பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

கற்படுக்கைகள் உள்ள குடகிற்குச் செல்லும் இக்கட்டான வழிக்கு ஏழடிப்பட்டம் என்பது பெயர்.

சித்தன்னவாசல் கிராமத்தில் “நவச்சுனை” என்னும் பெயருள்ள குளம் ஒன்று உண்டு. இக்குளத்தருகில் நாவல்மரம் இருப்பதனால் நாவல்சுனை என்று பெயர் ஏற்பட்டு அப்பெயர் நவச்சுனை என்று மாறிற்று. இக்குளத்தில் எப்போதும் நீர் நிறைந்திருக்கும். 1911 இல் ல் இக்குளத்து நீர் இறைக்கப்பட்டபோது, இதற்குள் பாறையிலே முட்டை வடிவமுள்ளதாகக் குடைந்து அமைக்கப்பட்ட சிறு குகையும் அதில் ஒரு சிவலிங்கமும் காணப்பட்டதாம். ஓர் ஆள் இக் குகைக்குள் நுழைந்து லிங்கத்தை வலம் வரக் கூடிய அளவு இடம் இருக்கிறதாம். 10. சீயமங்கலக் குகைக்கோயில்

ர்க்காடு மாவட்டம் வந்தவாசித் தாலுகா தேசூரில் இருந்து தெற்கே ஒரு மைலில் உள்ளது சீயமங்கலம். சீயம் என்றால் சிங்கம் என்பது பொருள். சீயமங்கலம் என்பது சிம்மவிஷ்ணு சதுர்வேதி மங்கலம் என்பதன் திரிபாக இருக்கக்கூடும் என்றும், முதல் மகேந்திர வர்மனுடைய தந்தையாகிய சிம்மவிஷ்ணுவின் பெயரால் இந்தக் கிராமம் ஏற்பட்டிருக்கவேண்டும் என்றும் கருதுகிறார்கள்.

இவ்வூர்ப் பாறைக்குன்றில் அமைக்கப்பட்டது. இக்குகைக் கோயில். சிவன் கோயிலாகிய இது இன்றும் வழிபடப்படுகிறது.

இக் குகைக்கோயிலின் முன்புறத்தில், பிற்காலத்தில் அமைக்கப் பட்ட செங்கல் சுவர் மண்டபம் இக் கோயிலுக்குள் வெளிச்சம் புகாதபடி தடுத்துவிடுகிறது. ஆகையால், பட்டப் பகலிலும் இக்கோயில் இருள் அடைந்துள்ளது.

இந்தக் குகைக்கோயிலும், ஏனைய குகைக்கோயில்களைப் போலவே முன் மண்டபத்தையும் ஒரு திருநிலையறையையும் கொண்டுள்ளது. திருநிலையறையில் சிவலிங்க உருவமும், வாயிலில் இரண்டு துவாரபாலகர் உருவங்களும் உள்ளன. முன் மண்டபத்தின் இரண்டு கோடிகளிலும் இரண்டு போர்வீரர்களுடைய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. நீண்ட மீசையுடைய இந்த உருவங்கள் இடது கையில் கேடயத்தைத் தாங்கி வலது கையில் வாளைப் பிடித்து ஓங்கி வீசுவதுபோன்று அமைந்துள்ளன. இப்படிப்பட்ட சிற்ப உருவங்கள் வேறு குகைக்கோயில்களில் காணப்படவில்லை.