பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

12. சிங்கரத்துக் குகைக்கோயில்

231

தென் ஆர்க்காடு மாவட்டம் செஞ்சித் தாலுகா செஞ்சிக்கு வடக்கே இரண்டு மைலில் சிங்கவரம் என்னும் கிராமம் இருக்கிறது. சிங்கவரம் என்பது சிங்கபுரம் என்பதன் மரூஉ. இது சிங்கபுர நாட்டின் தலைநகராக இருந்தது. முதலாம் மகேந்திரவர்மன் தந்தையாகிய சிம்மவிஷ்ணுவின் காலத்தில் அந்த அரசன் பெயரால் இந்நகரம் உண்டாக்கப்பட்டிருக்கக்கூடும் என்று கருதுகிறார்கள்.

இந்த ஊருக்கு விஷ்ணு செஞ்சி என்றும் பெயர் கூறப் படுகிறது.

இவ்வூரில் உள்ள அரங்கநாதர் கோயில், பாறையைக் குடைந்து அமைக்கப்பட்ட குகைக்கோயில் ஆகும். இது முதலாம் மகேந்திர வர்மன் காலத்தில் அமைக்கப்பட்டது.

பாறையைக் குடைந்து அமைக்கப்பட்ட முன் மண்டபமும் அதற்குப் பின்னால் திருநிலையறையும் அதில் அனந்த சயன மூர்த்தியின் உருவமும் உள்ளன. மகாபலிபுரத்துக் கடற்கரைக் கோயிலில் உள்ள அநந்தசயன மூர்த்தியைப் போல, இங்குள்ள அரங்கநாதரும் வலது கையை நீட்டித் தொங்க விட்டிருக்கிறார். இந்த உருவம், பிற்காலத்தில், சிற்பிகளால் செப்பனிடப்பட்டாதகத் தெரிகிறது. மண்டபத் தூண்களில், மகேந்திர வர்மன் தூண்களில் காண்ப்படுகிற தாமரைப்பூவின் சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தளவானூர்க் குகைக்கோயிலில் உள்ள துவாரபாலகர் போன்ற உருவங்களும் இங்கு உள்ளன. இக்கோயிலில் இப்போதும் வழிபாடுகள் நடைபெறுகின்றன.

பல்லவக் குகைக்கோயில்களில் காணப்படுகிறபடி இக் கோயிலிலும் சாசன எழுத்துகள் இருக்கவேண்டும். ஆனால், இதுவரையில் இங்குச் சாசன எழுத்துக்கள் கண்டுபிடிக்கவில்லை. ஏனென்றால் பாறைத் தூண்களுக்கு இடையில், பிற்காலத்தில் செங்கற் சுவர்கள் அமைக்கப்பட்டிருப்பதினால், சாசன எழுத்துகள் மறைந்திருக் கக்கூடும், ஆர்க்கியாலஜி இலாகா, இங்குள்ள சாசன எழுத்தைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தது. ஆனால், கோயில் அதிகாரிகள் செங்கல் சுவரை எடுத்துவிட மறுக்கிறபடியால் அவர்கள் முயற்சி நிறைவேறவில்லை.