பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

இங்குள்ள பிற்காலத்துச் சாசனம் ஒன்று "சகல புவன சக்ரவர்த்திகள் ஸ்ரீ அவனி ஆளப்பிறந்தான் கோப்பெருஞ்சிங்க தேவர்க்கு” 4வது ஆண்டில் எழுதப்பட்டது. இதில் இக்கோயில் "திருப்பன்றிக்குன்று எம் பெருமான்” என்று கூறப்படுகிறது. எனவே, இக் குகைக்கோயில், ஆதிகாலத்தில் வராகப்பெருமாள் கோயிலாக இருந்திருக்க வேண்டும் என்றும், பிற்காலத்திலே இக் கோயில் அரங்கநாதர் கோயிலாக மாற்றப்பட்டிருக்க வேண்டும் என்றும் நினைக்க வேண்டியதாக இருக்கிறது.

சிங்கவரம் குகைக்கோயில், மகேந்திர வர்மன் தந்தையான சிம்மவிஷ்ணு காலத்தில் அமைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

குறிப்பு:- முகம்மது துக்லாக் என்பவன் டெல்லியை அரசாண்ட காலத்தில் அவனுடைய சேனாதிபதி மாலிக்காபூர் என்பவனைத் தென்னாட்டிற்கு அனுப்பிக் கோயில்களைக் கொள்ளையிட்டான். தென்னாட்டுக் கோயில்களைக் கொள்ளையடித்த மாலிக்காபூர் ஸ்ரீரங்கத்துக்கு வந்து அக் கோயிலைக் கொள்ளையிட்டான். அவன் வருவதையறிந்த ஸ்ரீரங்கத்துக் கோயில் அதிகாரிகள் ஸ்ரீரங்கநாதரைக் கொண்டுவந்து, சிங்கவரம் குகைக்கோயிலில் வைத்துவிட்டார்கள் என்றும் அந்த ஸ்ரீரங்கநாதர் உருவந்தான் இப்போது இங்குள்ளது என்றும் கூறுகிறார்கள். இப்போது ஸ்ரீரங்கத்தில் உள்ள அரங்கநாதர் உருவத்தை விட சிங்கவரத்தில் உள்ள அரங்கநாதர் உருவம் சற்றுப் பெரிது என்றும் கூறுகிறார்கள். கி. பி. 1327 - 28-ல் நடைபெற்ற மாலிக்கா பூர் கோயில் கொள்ளையைக் கோயில் ஒழுகு, குருபரம்பரைப் பிரபாவம் என்னும் வைணவநூல்கள் கூறுகின்றன. அப்போது ஸ்ரீரங்கத்தில் இருந்த பிள்ளை லோகாசார்யரும் வேதாந்த தேசிகரும் முறையே, தென்னாட்டிற்கும் மைசூர்நாட்டிற்கும் ஓடி மறைந்தார்கள் என்றும் அந்நூல்கள் கூறுகின்றன. ஸ்ரீரங்கத்தில் இருந்து அரங்க நாதரை முதலில் திருப்பதிக்குக் கொண்டுபோனார்கள் என்றும், பிறகு அங்கிருந்து செஞ்சிக்கு அருகில் உள்ள சிங்கவரத்திற்குக் கொண்டு வந்தார்கள் என்றும், பின்னர்ச் செஞ்சியை அரசாண்ட துபாகி கிருஷ்ணப்ப நாயகர் என்னும் அரசரின் குருவாக இருந்த நல்லான் சக்ரவர்த்தி சத்ரயாகம் சேஷாத்திரி மீண்டும் ஸ்ரீரங்கத்துக்கு கொண்டு போகப்பட்டுக் கோபனார்யர் என்பவரால் பிரிதிஷ்டை செய்யப்பட்டது என்றும் அனந்தார்யர் இயற்றிய பிரபன்னாம்ருதம் என்னும் நூல் கூறுகிறது.