பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

சிற்பக்கலை

சிற்பக்கலையையும் நம்மவர் இக்காலத்தில் போற்றுவதில்லை. சிற்பக் கலையின் பெருமையையும் அழகையும் இனிமையையும் உணராததே இதற்குக் காரணம். கோயில்களுக்குத் தர்மகர்த்தராக அல்லது அறநிலைய அதிகாரியாக இருப்பவர்கள் பெரும்பாலும் அழகுக் கலையை உணராதவர்கள்; கலைகளின் சிறப்பையும் அருமைபெருமைகளையும் அறியாதவர்கள். அவர்களுக்குள்ள கவலையெல்லாம் கோயில் பூஜை முதலியவை சரியாக நடக்கின்றனவா என்பது பற்றியே. கோயில்கள் கலைக் கூடங்கள் என்பதை அவர்கள் அறவே மறந்துவிட்டார்கள்.

கோயிலும் கலைகளும்

சமய வாழ்க்கையோடு கலைகளையும் இணைத்திருந்தனர் நமது பெரியோர். இக்காலத்தில் இசையரங்கங்கள் வேறாகவும், நாடகமேடைகள் வேறாகவும், பொருட்காட்சிசாலைகள் வேறாகவும், ஓவியக் கலைக்கூடங்கள் வேறாகவும் இருப்பது போல கலைச் சாலைகள் வெவ்வேறாக அக்காலத்தில் அமைக்கப்படவில்லை. கோயில்களே கலைக் கூடங்களாகவும், ஓவியக் காட்சிச் சாலை களாகவும், இசையரங்கங்களாவும், நாடக மேடைகளாகவும் விளங்கின. அதனால் தான் சிற்பங்களும் ஓவியப்படங்களும் நமது கோயில்களில் இடம்பெற்றன.

ஒவ்வொரு பெரியகோயிலிலும் சங்கீத மண்டபங்கள் இருந்தன. அங்கு இசையும், இசைக் கருவிகளும், நர்த்தம் நாட்டியம் முதலியவை களும் பண்டைக்காலத்தில் நடைபெற்றன, ஏன்? இலக்கியக் கலைக் கூடமாகவும் கோயில்கள் திகழ்ந்தன. கோயில் களிலே சமயச் சார்பான காவியங்களையும் புராணங்களையும் புலவர் படித்துப் பொருள் கூறி விளக்கினார்கள். மகாபாரதம், இராமாயணம், பெரிய புராணம், திருவிளையாடல் புராணம் முதலிய இலக்கிய நூல்கள் கோயில் களிலே விளக்கப்பட்டதை ஊரார் கேட்டு இலக்கிய கலையறிவையும் சமய அறிவையும் அடைந்தார்கள். பௌத்தசமயம் ஓங்கியிருந்த காலத்தில், புத்த ஜாதகக் கதைகள் போன்ற பௌத்த சமய நூல்கள் பௌத்தக் கோயில்களில் ஓதப்பட்டன. ஜைன சமயம் ஓங்கியிருந்த காலத்தில் ஸ்ரீ புராணம் முதலிய ஜைன சமய நூல்கள் கோயில்களில் படிக்கப் பட்டன.