பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

இந்தக் கோயிலின் விமானம் நான்கு பட்டையாக அமைந்திருக்கிறது. விமானத்தின் நான்கு மூலைகளிலும் சுருள் கொடி சித்தரிக்கப்பட்டிருக்கிறது. மற்றப்படி இவ் விமானத்தில் கர்ணகூடு, பஞ்சரம், காலை முதலிய உறுப்புகள் இல்லை. விமானத்தின் உச்சியில் இருக்க வேண்டிய கும்பகலசம், இக் கோவிலுக்கு அருகாமையில் மேடையின் மேல் இருக்கிறது. இந்தக் கலசத்தை வேறு தனிக் கல்லினால் செய்து இதன் உச்சியில் வைக்க எண்ணினார் போலும் இக் கோயிலை அமைத்த சிற்பாசாரி.

இந்தக் கட்டிடத்திற்குத் தமிழில் இளங்கோயில் என்றும் வடமொழியில் ஸ்ரீசுரக்கோயில் என்றும் பெயர். இது திராவிட கட்டிடப் பிரிவைச் சேர்ந்தது.

சிலர், இளங்கோயில் என்பதைப் பாலாலயம் என்று மொழி பெயர்த்துக் கொண்டு, பழைய கோயிலைப் புதுப்பிக்கும் போது, அந்த வேலை முடியும் வரையில் தற்காலிகமாகக் கோயில் மூர்த்தியை வைத்திருக்கும் இடத்திற்குப் பாலாலயம் என்பது பெயர் என்று கூறுகிறார்கள். இவர்கள் கூற்று தவறானது. பாலாலயம் வேறு; இளங்கோயில் வேறு. திருநாவுக்கரசர் தமது தேவாரத்தில் இளங் கோயிலைக் குறிக்கிறார். மீயச்சூர் கோயிலை இளங்கோயில் என்று கூறுகிறார். திருவேங்கடத்து அருகில் திருச்சானூர் (திருச்சோகினூர்) பத்மாவதி அம்மனுக்கு முற்காலத்தில் இருந்த கோயில் இளங்கோயில் என்று ஒரு கல்வெட்டுச் சாசனம் கூறுகிறது.

திராவிடக் கோயில் விமான வகையில் சேர்ந்தது இளங்கோயில். இளங்கோயில் உருவங்கள், மகாபலிபுரத்திலேயே வேறு இடங்களில் புடைப்புச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. அவை, அருச்சுனன் தபசு என்று இப்போது தவறாகப் பெயர் கூறப்படுகிற சகரசாகரர் கதைச் சிற்பத்திலும், இராமாநுச மண்டபம் என்னும் குகைக் கோயிலின் முன்புறத்து இரு கோடியிலும் காணப்படுகின்றன. இளங்கோயில் அமைப்புள்ள வேறு கட்டிடங்கள் கொடும்பாளுர் முதலிய பல இடங்களிலும் உள்ளன. மகாபலிபுரத்தில் வலயங்குட்டைக்கருகில் உள்ள “இரதம்” என்னும் கோயிலும், பிடாரி கோயிலுக்கு அருகில் இருக்கிற இன்னொரு “இரதம்” என்னும் கோயிலும் இளங்கோயில் விமானங்களையுடையன.