பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

315

இடமேற்பட்டிருக்கிறது. இதில் சிறப்பான செய்தி என்னவென்றால், முழுவதும் மறைந்துகிடந்த பல்லவ அரசர்களைப்பற்றிய வரலாறு களும், செய்திகளும் இப்போது மீண்டும் நமக்குக் கிடைத்திருப்பது தான்.

ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, பல்லவ அரசர் களின் வரலாறுகளும் செய்திகளும் நமக்கு ஒன்றுமே தெரியா திருந்தது. இப்போது, அவர்களைப் பற்றிய பல செய்திகளையும் வரலாறுகளையும் நாம் அறிந்துகொள்ள, ஆர்க்கியாலஜி, எபிகிராபி ஆராய்ச்சி பெரிதும் உதவிசெய்திருக்கிறது. ஏறத்தாழ கி. பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு வரையில் பல்லவ அரச பரம்பரையினர் தொண்டை மண்டலத்தையும் சோழமண்டலத்தையும் அரசாண்டு வந்தனர். அவர்களுள் பேரும் புகழும் படைத்து விளங்கியவர் சிலர். இச் சிலரில் முதன்மை யானவன் மகேந்திரவர்மன் ஆவன். இவ் வரசனைப்பற்றிய வரலாறும் இவன் காலத்து வரலாறும் இந் நூலில் கூறப்படுகிறது.

மகேந்திரவர்மன் வாழ்ந்த காலம் கி. பி. 7ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகும். இவன் காலத்திலே தமிழ் நாட்டிலே சமண சமயமும் பௌத்த மதமும் பரவிச் சிறப்பு பெற்றிருந்தன. சைவ வைணவ மதங்கள் குன்றி மங்கிக்கிடந்தன. ஆனால், பத்திநெறி தோன்றி யிருந்தது. இவ்வரசன் காலத்திலே தான் அப்பர் சுவாமிகள் எனப்படும் திருநாவுக்கரசு சுவாமிகள் வாழ்ந்திருந்தார். சமண சமயத்தவனாக இருந்த மகேந்திரவர்மனை இவர் சைவ சமயத்தில் சேர்த்தார். அன்றியும் பக்திநெறியையும் சைவ சமயத்தையும் வளர்த்து நாடெங்கும் பரவச் செய்தார்.

மகேந்திரவர்மன் பேரும் புகழும் படைத்த அரசனாக மட்டும் வாழவில்லை; சிற்பம் ஓவியம் காவியம் இசை முதலிய நற்கலைகளை நன்கு கற்ற கலைச்செல்வனாகவும் விளங்கினான். கலைச்செல்வனாக விளங்கியதல்லாமல் கலை வள்ளலாகவும் வாழ்ந்தான். இவன் அளித்த கலைச்செல்வங்கள் இப்போதும் தமிழ்நாட்டில் நின்று நிலவுகின்றன.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இவ் வரசனைப்பற்றியும் இவன் காலத்து நிகழ்ச்சிகளைப் பற்றியும் இவன் அமைத்த குகைக்கோயில் முதலிய கலைகளைப் பற்றியும் இந்நூலில் ஆராயப்படுகின்றன.