பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகை ஆண்ட முடியுடைவேந்தர் மூவர்களான சேர சோழ பாண்டிய வேந்தர்கட்குப்பின், சிறு சிறு பிரிவுகளாக ஆக்கிக்கொண்டு நம் தமிழகத்தை ஆண்ட வேந்தர்கள் பற்பலராவர்.

அவர்களுள், பல்லவ வேந்தர்களும் ஒரு பகுதியராவர். இவர்கள் காலத்தில் சிற்பக்கலை ஒவியக்கலை இசைக்கலை எங்கும் தலைசிறந்து ஓங்கி மிளிர்ந்தன. அக் கலைகளை வளர்த்த பல்லவ மன்னர்கள் வரிசையில் சிறந்துரிமை யுடையனாகக் கொள்ளத் தக்கவன், மாமல்லன் நரசிம்மவர்மன் என்னும் பெயர்பூண்ட அரசனாவன்.

இம் மன்னன் அரசு கட்டிலேறி ஆட்சிகொண்டிருந்த காலம் சற்றேறக்குறையக் கி.பி. ஏழாம் நூற்றாண்டென்று இற்றை ஞான்றை ஆராய்ச்சி வல்லுநர் கருதுகின்றனர். இக்கருத்தைக் கல்வெட்டு முதலிய அகச்சான்றுகள் அரண்செய்கின்றன. இவன் காலத்தே சமணசமயம், நம் தமிழகமெங்கும் பரவியிருந்ததாகக் காணக் கிடக்கின்றது. இக் காலத்தே தான், நம் சைவசமய குரவர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் முதலிய நாயன்மார்களும், பேய், பூதம், திருமழிசை ஆழ்வார் முதலிய திருமாலடியார்களும் வாழ்ந்தி ருந்ததாகும்.

இவன், வாள்வலி தோள்வலி படைவலிகளில் தனக்கு ஒப்பாரும் மிக்காருமின்றித் தலைசிறந்து விளங்கினான். இவன்மேற் போர்முற்றிப் பொருத சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியைப் போர்க் களத்தில் புறங்கண்டு முறியடித்து, அவன் தலைநகரான வாதாபி நகரின்மேற் படையெடுத்துச் சென்றான். இவற்குப் படைத்துணையாகத் தலைமை தாங்கிச்சென்றவர், அறுபான்மும்மைத் தொண்டருள் ஒருவராக வாளான் மகவரிந்து இறைவற்கு அமுதூட்டிய அரும்பெற்ற செயலினராகப் போற்றப் பெறும் சிறுத்தொண்டரென்னும் பெயரின ராகிய பரஞ்சோதியாராவர். இவர்தம் துணைவலியானே அந்நகரைப்