பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

325

தமிழிலே சரித்திர நூல்கள் இன்னும் சரியாக வெளிவர வில்லை. எழுதப்படவேண்டிய வரலாற்று நூல்கள் இன்னும் பலப்பல உள்ளன. நமது நாட்டு வரலாறு இன்னும் முழுவதும் வெளிவராமலும், மக்களுக்குத் தெரியாமலும் இருக்கின்றன. பழைய அரசியல், சமூக இயல், சமய இயல், கலை இயல், இலக்கிய இயல் முதலியவற்றின் வரலாறுகளை நாம் அறியவில்லையானால், நாகரிகத்தில் நாம் வளர்ச்சியடைய முடியாது. பழைய வரலாறுகள் எதிர்கால வாழ்விற்கு வழிகாட்டும் விளக்குப்போன்றவை. ஆகவே, நமது நாட்டைப்பற்றிய பலதுறை வரலாறுகள் நமக்கு மிகமிகத் தேவையாயுள்ளன.

-

நான் சரித்திரத்துறையில் பயின்றவன் அல்லன். ஆயினும், நமது நாட்டுப் பழைய வரலாறுகளை அறிய வேண்டும் என்னும் ஆர்வம் இந் நூலை எழுதத் தூண்டியது. காய்தல் உவத்தல் இல்லாமல், விருப்பு வெறுப்புக்களை அகற்றி, நடுநிலைநின்று என்னால் இயன்றவரையில் ஆராய்ந்து எழுதியிருக்கிறேன். ஆதாரங்களையும் சான்றுகளையும் ஆங்காங்கே காட்டியுள்ளேன். சிற்சில இடங்களில் ஒரே செய்தியை மீண்டும் கூறியுள்ளேன். இதனைக் கூறியது கூறல் என்னும் குற்றமாகக் கொள்ளாமல் தெளிவுபடுத்தும் பொருட்டு அநுவாதமாகக் கூறியதாகக் கொள்ளவேண்டும். இச் சிறு நூல், நமது நாட்டு வரலாற்றின் ஒரு பகுதியை யறிவதற்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இந்நூலை நல்லமுறையில் அச்சியற்றி வெளியிட்ட திருநெல் வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாருக்கு எனது நன்றியுரியது.

மயிலாப்பூர், சென்னை

-

4.

இங்ஙனம்,

சீனி. வேங்கடசாமி