பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

அரைகுறையாக அழிந்து போயிருந்தாலும், அழியாத பகுதிகளை அழியவிடாமல் போற்றிப் பாதுகாக்கவேண்டும். அவற்றைப் படம் பிடித்தோ, தக்கவர்களைக் கொண்டு படி எழுதுவித்தோ பொது மக்களுக்கு அறிமுகப்படுத்தவேண்டும். இப்படிச் செய்வது நமது நாட்டு ஓவியக் கலைக்குச் செய்த பெருந்தொண்டாகும்.

இசைக்கலை

இசைக்கலையைப் பாதுகாப்பது பற்றி ஒன்றும் சொல்ல வேண்டுவது இல்லை. ஏனென்றால், ஏனைய அழகுக் கலைகளை விட அதிகமாக இசைக் கலையை மக்கள் அறிந்திருக்கிறார்கள். மேலும், பேசும் படம் (சினிமா), வானொலி நிலையம், இசையரங்கம் முதலியவை பெருகியுள்ள இக்காலத்தில் இசைக் கலை எல்லோரும் அறிந்த நற்கலையாக விளங்குகிறது.

யாழை உயிர்ப்பிக்கவேண்டும்

பழைய கலைகளைப்பற்றிக் கூறுகிற இந்நூலிலே, இசைக் கலை சம்பந்தப்பட்டவரையில் ஒன்று கூற விரும்புகிறேன். அது யாழ் என்னும் இசைக் கருவியைப்பற்றியது. யாழ், பண்டைக் காலத்திலே இந்தியா தேசம் முழுவதும் பயிலப்பட்டிருந்த ஒரு சிறந்த இசைக் கருவியாகும். வட இந்தியாவில் இக்கருவி வழக் கொழிந்த பிறகும், தமிழ்நாட்டிலே இது நெடுங்காலம் பயிலப்பட்டுப் பின்னர் கி.பி. 11 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு மறைந்துவிட்டது. யாழுடன் சம்பந்தப்பட்டவை பழைய பண்கள். அப்பர், சம்பந்தர், சுந்தரர், திருப்பாணாழ்வார், திருநீலகண்ட யாழ்ப்பாணர், பாணபத்திரர் முதலியவர்கள் காலத்திலும், அவர்கள் காலத்துக்கு முற்பட்ட சங்ககாலத்திலும் தமிழ் நாட்டில் பயிலப்பட்ட பண்கள் யாழ் இசையுடன் சம்பந்தப்பட்டவை.

மறைந்துபோன யாழ் இசைக் கருவியை மீண்டும் புதுப்பித்து, அதை வழக்கத்திலே கொண்டுவர முயற்சி செய்யவேண்டும். யாழ் நூல் என்னும் இசையாராய்ச்சி நூலை எழுதிய முத்தமிழ்ப் பேராசிரியர் உயர் திரு. விபுலாநந்த அடிகள் அரிதின் முயன்று ஆராய்ந்து யாழ்க் கருவியொன்றைச் செய்தார்கள். ஆனால், அக்கருவியை நாட்டில் பயன்படுத்துவதற்கு முன்பே அவர்கள் காலஞ் சென்றுவிட்டார்கள்.