பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

6

ஆனால், பௌத்த சமணர்களுக்கு மாறாகச் சைவரும் வைணவரும், தமது பரம்பொருளான உயர்ந்த கடவுளுக்கு நான்கு அல்லது எட்டு கைகளைக் கற்பித்துத் தமது சிறு தெய்வங்களுக்கு இரண்டு கைகளை மட்டும் கற்பித்துச் சிற்ப உருவங்களை அமைத்திருக்கிறார்கள். இந்த நுட்பம் இந்தச் சமயங்களின் சிற்ப உருவங்களைக் கூர்ந்து பார்த்தால் நன்கு விளங்கும்.

சைவ வைணவ சிற்ப உருவங்களைப்பற்றி இன்னொரு நுட்பத்தையும் வாசகர் உணர வேண்டும். சிவன் திருமால் உருவங்களுக்கு முதன்மை கொடுக்கும்போது அவ்வுருவங்களுக்கு நான்கு அல்லது எட்டுக் கைகளைக் கற்பித்து அவர்களின் சத்தியாகிய அம்மன், தேவி உருவங்களுக்கு இரண்டு கைகளை மட்டும் கற்பிக்கிறார்கள். ஆனால், அம்மன் தேவிகளுக்கு முதன்மை கொடுக்கும்போது அவ்வுருவங்களுக்கு நான்கு அல்லது எட்டு கைகளைக் கற்பித்துச் சிற்ப உருவம் அமைக்கிறார்கள். சிற்பக் கலை ஆராயும் வாசகர் இந்த நுட்பத்தையும் உணரவேண்டும்.

நால் வகைப் பிரிவு அை

உலோகத்தினாலும் கல்லினாலும் அமைக்கப்பட்ட சிற்ப உருவங்களை தெய்வ உருவங்கள் என்றும், இயற்கை உருவங்கள் என்றும், கற்பனை உருவங்கள் என்றும், பிரதிமை உருவங்கள் என்றும் நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

தெய்வ உருவங்கள் என்பது, சிவபெருமான், பார்வதி, கணபதி, முருகன் முதலிய சைவ சமயத் தெய்வ உருவங்களும், திருமால், இலக்குமி, கண்ணன், இராமன் முதலிய வைணவ சமயத் தெய்வ உருவங்களும் ஆகும்.

இயற்கை உருவங்கள் என்பது மனிதன், மிருகம், பறவை முதலிய இயற்கை உருவங்கள் ஆகும்.

கற்பனை உருவங்கள் என்பது இயற்கையில் காணப்படாத, கற்பனையாகக் கற்பித்து அமைக்கப்பட்ட உருவங்கள், இலைக் கொடிகள் சரபப்பட்சி, இருதலைப்பட்சி, மகரம், கின்னரம், குக்குட சர்ப்பம், நாகர், பூதர் முதலியவை கற்பனை உருவங்களாகும். அன்றியும் கற்பனையாக அமைக்கப்பட்ட இலைக்கொடி பூக்கொடி உருவங்களுமாகும்.

"